சென்னை: பிசிறு என்று கூறியதால், சீமானிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள். மீனவர் குடும்பத்தில் இருந்து தனது பேச்சுத்திறமை மூலம் அரசியuல் தனக்கென ஓர் இடம் பெற்றவர். நாகப்பட்டினம் மக்களவை உள்பட பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு, சொந்தப் பணத்தை எல்லாம் இழந்து நிற்கிறார். இதற்கிடையே, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் அக்கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளுக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சில ஆடியோக்கள் வெளியாகி இருந்தன. அதில் காளியம்மாளை பிசிறு, அதனை தட்டி விட வேண்டியதுதான் என்று சீமான் குறிப்பிட்டிருந்தார். இதனை சுட்டிக்காட்டி சீமானும் விளக்கம் அளித்திருந்தார். இதனிடையே நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறுவது என காளியம்மாள் முடிவெடுத்துள்ளார். அடுத்து எந்த கட்சிக்கு செல்வது? என்பது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியானது. குறிப்பாக விஜய் கட்சிக்கு செல்வது குறித்து அவர் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பை குறிப்பிடாமல், சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டு காளியம்மாளின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதே நிகழ்ச்சியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த அழைப்பிதழ் தற்போது வைரலாகி வருகிறது. காளியம்மாளின் பெயருக்கு பின் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிடப்பட்டுள்ளதால், அவர் நாம் தமிழர் கட்சியில் உள்ளாரா? அல்லது விலகியுள்ளாரா? என்பதில் குழப்பம் நிலவுகிறது. இது தொடர்பாக காளியம்மாள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முடிவு குறித்து விரைவில் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியில் இருந்து மாவட்ட செயலாளர்கள் உள்பட முன்னணி நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளும் வெளியேற உள்ளது சீமானுக்கும், கட்சிக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நாம் தமிழர் கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. தற்போது முக்கியமான தலைவர்கள் அனைவரும் வெளியேறி வருவதால் கடைசியில் சீமான் மட்டுமே கட்சியில் மிஞ்சும் சூழ்நிலை தான் உருவாகியுள்ளதாக நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
The post பிசிறு என்று கூறியதால் சீமானிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்? : வைரலாகும் அழைப்பிதழால் பரபரப்பு appeared first on Dinakaran.