சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 27 ஆண்டுக்கு பிறகு தாரைவார்த்தது. அதன் தொடர்ச்சியாக சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றது. அத்துடன் ஆஸ்திரேலியாவில் நடந்த அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் தோற்று 10 ஆண்டுக்கு பிறகு பார்டர்- கவாஸ்கர் கோப்பையை இழந்தது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பும் பறிபோனது.
இந்த தோல்விகளின் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறப்பட்டது. அதில் 45 நாட்களுக்கு மேல் வெளிநாட்டு தொடர் என்றால் வீரர்களுடன் 2 வாரம் மட்டும் குடும்பத்தினர் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற புதிய விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் சென்றால் வீரர்களின் கவனம் சிதறுவதாக குற்றச்சாட்டு காணப்படுகிறது.
இந்நிலையில் பி.சி.சி.ஐ.-யின் இந்த விதிமுறை விராட் கோலிக்கு அதிகப்படியான அழுத்தத்தை உண்டாக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலிக்கு தற்போது குடும்பம் இருக்கிறது. களத்திற்கு வெளியே அவருக்கு மற்ற வேலைகள் இருக்கும். உலகம் முழுவதிலும் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் டாமினேட் செய்த போது அவருக்கு குடும்பம் இல்லை. எனவே அவருடைய பார்ம் என்பது கிரிக்கெட்டை மட்டும் பொருத்தது அல்ல. களத்திற்கு வெளியே என்ன நடக்கிறது என்பதையும் பொறுத்து அமைகிறது.
தற்போது குடும்பங்கள் பற்றி பி.சி.சி.ஐ. கொண்டு வந்துள்ள புதிய விதிமுறை விராட் கோலிக்கு இன்னும் அதிகமான அழுத்தத்தை கொடுக்கும். ஏனெனில் உங்களுக்கு சமநிலை வேண்டும். வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் முடிந்தளவுக்கு வீரர்கள் தங்களுடைய குடும்பத்தையும் கொண்டிருக்க வேண்டும். அதிலும் தற்சமயத்தில் இந்திய அணி அதிகமாக பயணம் செய்து விளையாடுவதால் வீரர்களுடன் குடும்பங்கள் இருப்பது நல்ல உணர்வை கொடுக்கும்" என்று கூறினார்.