பாவம் போக்கும் பெரியாவுடையார்

2 weeks ago 2

திண்டுக்கல் அருகே உள்ள மானூர் பகுதியில் உள்ளது பெரியாவுடையார் திருக்கோவில். சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் ஏழு ஜென்மங்களின் பாவங்களையும் கூட விலக்கும் தலமாக விளங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இங்குள்ள இறைவன் பெரியாவுடையாரை, பிரகதீஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள்.

பழனிக்கு வந்த முருகப்பெருமான்

ஒருமுறை நாரதரின் கலகத்தால், முருகப்பெருமானுக்கு, விநாயகருக்கு ஞானப்பழத்தை யார் பெறுவது? என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வைக்கப்பட்ட போட்டியில் விநாயகர் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கே ஞானப்பழம் வழங்கப்பட்டது. இதையறிந்த முருகப்பெருமான், கோபம் கொண்டு பூலோகத்தில் உள்ள பழனி மலைக்கு வந்தார். அங்கேயே கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினார்.

ஆனால் சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் முருகப்பெருமான் பிரிந்து சென்றதில் பெரும் துயர் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் முருகனைக் காண்பதற்காக பூலோகம் வந்தனர். பழனிக்கு அருகில் உள்ள ஓர் இடத்தில் வந்து தங்கினார்கள். அந்த இடத்தில் இருந்த இயற்கை எழிலை கண்ட சிவபெருமான், அங்கேயே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க சித்தம் கொண்டார். ஆனால் பார்வதிதேவியோ, தன் மகன் முருகனைக் காண, பழனிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று சிவபெருமானை வேண்டி நின்றார்.

அம்மனுக்கு சன்னிதி இல்லை

இதையடுத்து சிவபெருமானும், பார்வதிதேவியை அங்கிருந்து பழனிக்கு செல்வதற்கு அனுமதித்தார். பிரிய மனமில்லாமல், நாயகி விடை பெற்றதால், அம்பாள், பிரியா நாயகி என்றும், விடை கொடுக்க மனமில்லாமல் சிவபெருமான், பார்வதிக்கு விடை கொடுத்து அனுப்பியதால், பிரியாவிடையார், என்று அழைக்கப்பட்டார்கள். இதுவே காலப்போக்கில் மருவி, பெரியாவுடையார் என்றும், ,பெரியநாயகி என்றும் மாற்றம் கண்டதாக கூறப்படுகிறது.

பார்வதி தேவி, முருகப்பெருமானை தேடி பழனிக்கு சென்றுவிட்டதன் காரணமாக, இந்தத் திருத்தலத்தில் அம்மனுக்குத் தனிச் சன்னிதி எதுவும் கிடையாது. இருந்தாலும் சக்தி வேறு, சிவம் வேறு என இல்லாமல் இரண்டும் ஒன்றானதால், இங்குள்ள சிவபெருமானை வழிபட்டாலே, சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும்.

பாவம் போக்கும் தீர்த்தம்

இந்த ஆலயம் மேற்கு பார்த்து அமைந்திருப்பதும், சிவபெருமானின் பீடம் சதுரமாக அமைக்கப்பட்டிருப்பதும், இந்த ஆலயத்தின் சிறப்பு அம்சமாக கூறப்படுகிறது. மூர்த்தியும், தலமும் இங்கு சிறப்புபெற்றதாகும். அதேபோல் தீர்த்தமும் இங்கு சிறப்பு வாய்ந்தது. வடக்கு நோக்கி ஓடும் சண்முகா நதி தீர்த்தம் அதில் முதன்மை பெற்றதாக உள்ளது. இந்த நதியில் நீராடி சிவபெருமானை வழிபட்டால், ஏழு ஜென்ம பாவமும் விலகும் என்று தல புராணம் தெரிவிக்கிறது. மேலும் இந்த ஆலயத்திற்கு மற்றொரு சிறப்பும் உள்ளது. பழனி முருகனை வழிபட வரும் பக்தர்கள், முன்பாக இத்தலத்திற்கு வந்து, இங்குள்ள சண்முகா நதி தீர்த்தத்தில் நீராடி தந்தையான, பெரியாவுடையாரை தரிசனம் செய்தால் தான் முழுபலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இத்தலத்தில் உள்ள பரிவார மூர்த்திகளும், பிரதோஷ நாயனாரும் சிறப்பு வாய்ந்ததாகும். பொதுவாக பிரதோஷ மூர்த்தி, அம்பாளுடன் நான்கு கைகளுடன் நின்ற நிலையில் இருக்கும். ஆனால் இங்குள்ள பிரதோஷ மூர்த்தி தாண்டவ நிலையில், ஒரு காலை தூக்கி கையில் டமருகத்துடன் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார்.

பிணிகள் நீங்கும்

இங்குள்ள நடராஜ சுவாமியும் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். எப்படியெனில், உடல் முழுக்க கருப்பு வண்ணத்திலும், முகம் மட்டும் வெள்ளை வண்ணத்திலும் அமைந்த நிலையில் கல்லில் வடிக்கப்பட்டவர். நடராஜரின் அருகில் சிவகாமி அம்பாளும் கிடையாது.

கருவறையில் வீற்றிருக்கும் இறைவனை சுற்றிலும் கோஷ்ட தேவதைகளாக பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகியோர் இருப்பது கோவிலின் சிறப்பாகும். மேலும் இத்தல தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

மேற்கு பார்த்த வகையில் அமைந்த சிவாலயம், மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் இறைவன், அனுக்கிரக மூர்த்தி. எந்த பிரச்சினையில் இருந்தும் மக்களை காப்பாற்றும் வல்லமை கொண்டவர். இது தவிர இத்தல இறைவனை வழிபட்டால் தடைபட்ட திருமணம், குழந்தைப் பேறு, தகுதியான வேலை, பித்ரு சாபம் நீங்குதல், எதிரிகள் தொல்லை விலகுதல், தன்னம்பிக்கை, மனத் தெளிவு போன்றவை கிடைக்கிறது. ஆயுள், ஆரோக்கியத்திற்காக ஆயுஸ்ய ஹோமம், மிருத்தியஞ்சய ஹோமம் போன்றவை இவ்வாலயத்தில் செய்யப்படுகின்றன.

இத்தலத்தின் உற்சவ மூர்த்தியாக நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர், பிரதோஷ தாண்டவர் திருமேனிகள் உள்ளன. தல விருட்சமாக கடம்ப மரம் இருக்கிறது. காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோவில் நடை திறந்திருக்கும்.

பூஜைகள்

ஆடி மாதம் 18-ந் தேதி அன்று வரும் ஆடிப்பெருக்கு அன்று, பெரியநாயகி அம்மன், இத்தலத்திற்கு எழுந்தருளி இறைவனுடன் சேர்ந்திருப்பதாக ஐதீகம். இந்த நாளில் பெண்கள், புதியதாக தாலிச்சரடு மாற்றுவார்கள். ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி, மாத பிரதோஷம், தமிழ் வருடப் பிறப்பு, ஆனி மாத ஜேஷ்டாபிஷேகம், ஐப்பசி மாத அன்னாபிஷேகம், கார்த்திகை மாதத்தில் வரும் சம்வத்சராபிஷேகம், சங்காபிஷேகம், தனுர் மாத பூஜை, தை அமாவாசை போன்றவை முக்கியத் திருவிழாக்களாக கொண்டாடப்படுகின்றன.

பழனியில் இருந்து வடக்கு நோக்கி 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மானூர். இத்திருத்தலத்தில்தான் பெரியாவுடையார் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு பழனியில் இருந்து அலங்கியம் செல்லும் பஸ்சில் ஏறி, மானூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

Read Entire Article