திருநெல்வேலி: இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், திருநெல்வேலியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் இந்தி எழுத்துகளை திமுகவினர் அழிக்கப் போவதாக தகவல் பரவியது. இதையடுத்து, பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் திருநெல்வேலி மாநகர போலீஸார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திடீரென பாளையங்கோட்டை ரயில் நிலையத்துக்கு கொடிகளுடன் சென்ற திமுகவினர் சிலர், ரயில் நிலைய நடைமேடையில் உள்ள பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழித்து, தமிழ் வாழ்க என்று எழுதினர். அப்போது, மத்திய அரசை கண்டித்தும், இந்தி திணிப்பை கண்டித்தும், தமிழ் வாழ்க என்றும் முழக்கமிட்டனர்.