சென்னை: “பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து அதிமுக மாணவர் அணி சார்பில், பிப்.18ம் தேதி, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்,” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் திமுக ஸ்டாலின் மாடல் அரசு பதவியேற்றதில் இருந்து, பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறுமிகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதே போல், கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதச் செயல்களும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது.அந்த வகையில், திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், பள்ளி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக, எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போதுவரை நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகளில் ஒருசிலவற்றை மக்களுக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.