பாலக்காடு,ஜன.12: பாலக்காடு அருகே தோணியில் மீண்டும் காட்டுயானை ஊருக்குள் புகுந்து தோட்டப்பயிர்களை சேதப்படுத்தியது. பாலக்காடு மாவட்டம் புதுப்பரியாரம் கிராமப்பஞ்சாயத்திற்குட்பட்ட மலையடிவாரத்தில் தோணி என்ற இடம் உள்ளது. இங்கு அடிக்கடி காட்டுயானை,சிறுத்தை,காட்டுமாடு, காட்டுப்பன்றிகள் ஊருக்குள் ஊடுருவி விளைச்சல் நிலங்களை துவம்சம் செய்து விடுவது வழக்கமாக உள்ளது.
இதனால் இப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியே நடமாடமுடியாமல் பெரிதும் அச்சத்துடன் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இங்கு ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நெல், தென்னை, பாக்கு, வாழை ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தோணி காட்டிலிருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை, வாழை, பாக்கு, மரச்சீனி, மரவள்ளி போன்றவற்றை சாய்த்து உண்டு விட்டு இப்பகுதிகளிலே முகாமிட்டுள்ளது.
இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவ,மாணவிகள் பள்ளி,கல்லூரிக்கு செல்லமுடியாமலும், தொழிலாளர்கள் வேலைகளுக்கு செல்ல முடியாமல் பீதியடைந்தவாறு உள்ளனர். தோணி பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுயானையை விரட்ட வேண்டும், இல்லையேல் அவற்றிற்கு மயக்கஊசி செலுத்தி பிடித்து வேறு காட்டிற்குள் விடவேண்டும் என இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வனத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
The post பாலக்காடு அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள் தோட்டப்பயிர்களை சேதப்படுத்தியது appeared first on Dinakaran.