நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் மின்வாரியம் மின்கம்பங்கள் நடும்போது சாலையின் ஓரம் நடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் நாளடைவில் சாலைகள் விரிவாக்கம் செய்யும்போது ஒரு சில மின்கம்பங்கள் சாலையின் ஒரத்தில் இருந்து சாலையின் நடுவே வந்துவிடுகிறது. இதனை மாற்றும்போது அந்த உட்டாட்சி நிர்வாகம் மின்வாரியத்திற்கு மின்கம்பத்தை மாற்றி அமைப்பதற்கான தொகை செலுத்தும்போது மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. இதுபோல் நாகர்கோவில் மாநகர பகுதியில் பல இடங்களில் இதுபோன்ற நிலை இருந்து வந்தது. மாநகராட்சி நிர்வாகம் அதற்கான உரிய பணத்தை செலுத்தி மாற்றி அமைக்கும் பணியை செய்து வருகிறது. சாலையின் நடுவே மின்கம்பங்கள் இருக்கும் போது சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்புள்ள குறுச்சாலை வழியாக வந்தால் பார்வதிபுரம் சானல் கரை வந்து சேரும். இந்த சாலையில் ஒரு மின்கம்பம் சாலையின் நடுவே நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களை ஓட்டி வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் பைக்கில் செல்பவர்கள் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால் சாலையின் நடுவே நிற்கும் அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பார்வதிபுரம் சானல்கரை அருகே சாலையில் நடுவே நிற்கும் மின்கம்பம் மாற்றப்படுமா? appeared first on Dinakaran.