பார்டர் - கவாஸ்கர் தொடரின் பாதியிலேயே ஓய்வு அறிவித்தது ஏன்..? - மனம் திறந்த அஸ்வின்

2 weeks ago 5

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் (வயது 38). இவர் இந்திய அணிக்காக 106 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான அஸ்வின் கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரின் பாதியில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

500க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய அவரை வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து புறக்கணித்து வந்தது. அதன் காரணமாக இளம் வீரர்களுக்கு வழிவிட்டு அஸ்வின் ஓய்வு பெற்றிருக்கலாம் என்று ரசிகர்கள் கருதினர். இந்நிலையில், பார்டர் - கவாஸ்கர் தொடர் நடந்து கொண்டிருக்கும்போதே ஓய்வு அறிவித்தது ஏன் என்பதற்கு அஸ்வின் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் நான் 100-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற விரும்பினேன். அதன் பின் சரி சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் விளையாடலாம் என்று நினைத்தேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நான் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் அந்தப் போட்டியில் நான் சதத்தை அடித்து 6 விக்கெட்டுகள் எடுத்தேன். இருப்பினும் நீங்கள் நன்றாக செயல்படும் போது ஓய்வு பெறும் முடிவை எடுப்பது கடினமாக இருக்கும்.

அப்போது, ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடுவோம் என்று முடிவு எடுத்தேன். ஏனெனில், கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது எனக்கு அது மிகமிக நல்ல தொடராக அமைந்தது. ஆனால், அங்கு முதல் போட்டியில் எனக்கு வாய்ப்பு கிடைக்காததால் சரி இது தான் ஓய்வு பெறுவதற்கான நேரமாக இருக்கலாம் என்று முடிவு எடுத்தேன். ஓய்வை அறிவித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு பெற்றிருந்தாலும், ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article