பார்டர் - கவாஸ்கர் கோப்பை: சுப்மன் கில்லுக்கு இந்திய முன்னாள் வீரர் அட்வைஸ்

3 weeks ago 6

மும்பை,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடந்துள்ள 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் கடந்த 21-ந்தேதியில் இருந்து அங்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக இந்த தொடரில் இந்தியாவின் பேட்டிங் துறையில் முன்னணி வீரர்களில் கே.எல். ராகுல் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகிறார். சுப்மன் கில், ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் சொதப்பி வருகின்றனர். விராட் மற்றும் ஜெய்ஸ்வால் முதல் டெஸ்டில் சதம் அடித்திருந்தாலும் மற்ற போட்டிகளில் பெரிதாக ரன் அடிக்கவில்லை. இந்த 4-வது போட்டியில் வெற்றி பெற இவர்கள் ரன் குவிக்க வேண்டியது அவசியமாகிறது.

இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டைப் போல டெஸ்ட் போட்டிகளிலும் சுப்மன் கில் அதிரடியான ஷாட்டுகளை அடித்து சுமாராக விளையாடுவதாக முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் விமர்சித்துள்ளார். மேலும் சுப்மன் கில் சிறப்பாக விளையாட சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சுப்மன் கில் கண்டிப்பாக பந்தை அடிப்பதில் கொஞ்சம் டெக்னிக்கல் தவறை கொண்டுள்ளார். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நீங்கள் அதிகமாக விளையாடும்போது இப்படித்தான் பந்தைஅடிப்பீர்கள். டிராவிஸ் ஹெட்டும் அதை செய்கிறார். ஆனால் அதையும் தாண்டி வெற்றிகரமாக செயல்படும் வழியைக் கண்டறிந்துள்ளார். ஆனால் சுப்மன் கில் போன்ற வீரர்கள் இந்தியாவில் பேட்டிங் செய்யும் விதம் மற்றும் சொந்த மண்ணுக்கு வெளியே பேட்டிங் செய்யும் விதம் ஆகியவற்றின் வலையில் சிக்கியுள்ளதாக நான் நினைக்கிறேன்.

அதாவது பந்தை பவுலர் வீசியதும் இது புல்லர் பந்தாக இருக்கும் என்பதால் அதை அடியுங்கள் என்று உங்களுடைய மனம் சொல்லும். ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு செல்லும் வீரர்கள் புல்லர் பந்துகளுக்கு எதிராக சாதாரண பயிற்சியிலேயே மாற்றத்தை செய்வார்கள். குறிப்பாக புதிய பந்துகளை அதிரடியாக எதிர்கொள்ளாமல் மெதுவாக அடிப்பார்கள்.

அத்துடன் உடலுக்கு நெருக்கமாக பந்தை அடிக்க முயற்சிப்பார்கள் அல்லது அடிக்காமல் விடப் பார்ப்பார்கள். 3வது இடத்தில் நீண்ட காலமாக விளையாடி வரும் சுப்மன் கில் மிகவும் சுமாரான ஷாட்டுகளை விளையாடுகிறார் என்று சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை. சொல்லப்போனால் மொத்த இந்திய பேட்டிங் துறையும் சில காலமாக நன்றாக விளையாடவில்லை. அவர்கள் தங்களுக்குத் தாங்களே அழுத்தத்தை போட்டுக் கொள்கிறார்கள்.

சுப்மன் கில் இந்தியாவில் விளையாடுகிறோம் என்று நினைத்துக் கொண்டு பவுலர் பந்தை கையிலிருந்து விட்டதும் அதை கடினமாக அடிக்க செல்கிறார். ஆனால் ஆஸ்திரேலியாவில் காபா போன்ற மைதானத்தில் ஆப் திசையில் விளையாடுவதை விட முன்னோக்கி விளையாடுவது எளிது. எனவே ஆஸ்திரேலியாவில் ஆட்டத்தின் தொடக்கத்தில், 'சரி நாம் இப்போது பந்தை தவற விடுவோம்' என்று சொல்லிக்கொண்டு விளையாட வேண்டும்" என கூறினார்.

Read Entire Article