
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் 1-3 (5 போட்டிகள்) என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோனது. மேலும் 10 வருடங்களுக்கு பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்தது. இதன் காரணமாக இந்திய அணியின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்ததன் காரணமாகவே தோல்வியை சந்தித்தது என்று பலராலும் பேசப்பட்டது. குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் சொதப்பியது முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக இந்த தொடரின் முதல் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் வெற்றி பெற்ற இந்தியா அதன் பின் ரோகித் தலைமையில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது.
இந்த தொடரில் பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டன்ஷிப்பிலும் திணறிய ரோகித் சர்மா மிகவும் தடுமாறினார். அதன் காரணமாக விமர்சனங்களை சந்தித்த அவர் சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக பும்ரா தலைமையில் விளையாடிய இந்தியா தோல்வியை சந்தித்தது. ரோகித் சர்மா விலகியதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ள ரோகித் சர்மா அந்த போட்டியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து தற்போது விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "அடிலெய்டு போட்டி (2-வது டெஸ்ட்) எனக்கு நன்றாக அமையவில்லை. அதனால் நான் தொடக்க வீரராக விளையாடியிருக்க வேண்டும் என்று கருதினேன். அது என்னுடைய இடம் என்பதால் அங்கே வெற்றி கிடைக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி விளையாட விரும்பினேன். இருப்பினும் 1- 1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் இருந்ததால் ஒரு போட்டியில் பரவாயில்லை என்று நினைத்தேன்.
பின்னர் பிரிஸ்பேனில் நடைபெற்ற 3-வது போட்டி டிராவில் முடிந்த நிலையில் மெல்போர்ன் போட்டியில் (4-வது டெஸ்ட்) தொடக்க வீரராக விளையாட விரும்பினேன். ஆனால் அந்தப் போட்டியில் நான் நன்றாக அடிக்கவில்லை. எனவே ஏதோ ஒரு வகையில் நல்ல வீரரான சுப்மன் கில் விளையாடுவதை நாங்கள் விரும்பினோம். 4வது போட்டியில் அவர் விளையாடவில்லை. என்னால் நன்றாக பேட்டிங் செய்ய முடியவில்லை. எனவே அடுத்த போட்டியில் (கடைசி போட்டி) நான் விளையாட விரும்பவில்லை.
நான் பயிற்சியாளரிடமும் தேர்வாளரிடமும் பேசினேன். அதைப் பற்றி ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. நீங்கள் அணியை முதலில் வெற்றி பெற வைக்க முயற்சி செய்யுங்கள். அணி என்ன விரும்புகிறது என்பதை பாருங்கள். அதற்கேற்ப முடிவெடுக்கவும். சில நேரங்களில் அது வேலை செய்யும், சில நேரங்களில் அது வேலை செய்யாமல் போகலாம். அது அப்படித்தான் நடக்கும். நீங்கள் முயற்சி செய்து எடுக்கும் ஒவ்வொரு முடிவும் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்காது"என்று கூறினார்.