பார்க்கிங் பிரச்சினையால் ஏற்பட்ட மோதல்; விஞ்ஞானி அடித்துக்கொலை

3 hours ago 1

சண்டிகர்,

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிஷேக் சுவர்னகர்(வயது 39). இவர் சுவிட்சர்லாந்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வந்தார். இவரது ஆய்வறிக்கைகள் சர்வதேச ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளன. சமீபத்தில் இந்தியா திரும்பிய அபிஷேக், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்(IISER) திட்டக்குழு விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார்.

இவர் தனது குடும்பத்தினருடன் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள செக்டார் 67 பகுதியில், வாடகை வீட்டில் குடியிருந்தார். அங்கு அவரது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மாண்ட்டி என்ற நபருக்கும், அபிஷேக்கிற்கும் இடையே வாகனத்தை பார்க்கிங் செய்வதில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பணி முடிந்து வீடு திரும்பிய அபிஷேக், தனது இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே பார்க்கிங் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த மாண்ட்டி, வாகனத்தை உடனடியாக எடுக்குமாறு கூறியுள்ளார். மேலும் வாகனத்தை உடைத்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அபிஷேக் மற்றும் மாண்ட்டி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது மாண்ட்டி, அபிஷேக்கை பிடித்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அபிஷேக் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். இதையடுத்து அபிஷேக்கின் குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விஞ்ஞானி அபிஷேக்கிற்கு சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது சகோதரி தனது சிறுநீரகங்களில் ஒன்றை அபிஷேக்கிற்கு தானம் செய்துள்ளார். மேலும் அபிஷேக் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சூழலில், பார்க்கிங் பிரச்சினையால் ஏற்பட்ட மோதலில் விஞ்ஞானி அபிஷேக் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாண்ட்டி தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Read Entire Article