பார் கவுன்சில் ஒப்புதலை பெற்று தான் வழக்கறிஞர் சேமநல நிதி முத்திரை கட்டணம் உயர்வு: சட்டசபையில் அமைச்சர் ரகுபதி விளக்கம்

2 days ago 3

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சிவகங்கை எம்எல்ஏ பெரி.செந்தில்நாதன்(அதிமுக) பேசுகையில், “வழக்கறிஞர் சேமநல நிதி ரூபாய் 10 இலட்சமாக இருக்கின்றபோது 30 ரூபாய்க்கான வெல்பர் ஸ்டாம் வழக்கறிஞர்கள் ஒட்டினார்கள். இப்போது அந்த 30 ரூபாய் ஸ்டாம்ப் ஆனது 120 ரூபாயாக 4 மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று. குமாஸ்தாக்களுக்கான சேமநல நிதி 2 ரூபாய் ஸ்டாம்பிலே 7 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். இப்போது அது 20 ரூபாய் ஸ்டாம்பாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஆனால், 4 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கக்கூடிய வழக்கறிஞர்களுக்கு அவர்களுடைய சேமநல நிதியும் 4 மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.40 லட்சமாகவும், குமாஸ்தாக்களுக்கு ரூ.20 லட்சமாகவும் சேமநல நிதி உயர்த்திக் கொடுக்கப்படுமா? என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுகையில், “வழக்கறிஞர்கள் சேமநல நிதி, அடுத்து வழக்கறிஞர்களுடைய எழுத்தர்களுடைய சேமநல நிதி இவையிரண்டும் உயர்த்தப்பட்டது.

அது தமிழ்நாடு பார் கவுன்சிலின் ஒப்புதலைப் பெற்றுத்தான் வழக்கறிஞர்களுடைய சேமநல நிதிக்கான அந்த முத்திரைக் கட்டணம் அதாவது 4 மடங்கு என்று சொல்கிறார்களே, அந்த ஸ்டாம்ப் கட்டணம் இன்றைக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் அரசாங்கமும் தர வேண்டும். அவர்களும் அதற்கான பங்கைத் தர வேண்டும். இடையிலே கொரோனா காலத்திலே ஏராளமான வழக்கறிஞர்கள் மரணமடைந்துவிட்ட காரணத்தாலே அதையும் ஈடுசெய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையெல்லாம் கருத்திலே கொண்டுதான் பார் கவுன்சிலினின் ஒப்புதலோடு அனைத்து வழக்கறிஞர் சங்கங்களுடைய ஒப்புதலோடுதான் இது நிச்சயமாக உயர்த்தப்பட்டிருக்கிறது” என்றார்.

The post பார் கவுன்சில் ஒப்புதலை பெற்று தான் வழக்கறிஞர் சேமநல நிதி முத்திரை கட்டணம் உயர்வு: சட்டசபையில் அமைச்சர் ரகுபதி விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article