பாராலிம்பிக்ஸில் பதக்கங்களை வென்று குவித்த இந்திய வீராங்கனைகள்!

1 month ago 15

நன்றி குங்குமம் தோழி

பாராலிம்பிக் என்பது மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை தொடர்ந்து 12 நாட்களுக்கு நடைபெற்றது. பாரிசில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு நாடுகளிலிருந்தும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவிலிருந்து 84 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்திய வீரர்கள் மொத்தம் 29 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்திய வீராங்கனைகளான அவனி லெகரா, மோனா அகர்வால், ப்ரீத்தி பால், ரூபினா பிரான்சிஸ், துளசிமதி முருகேசன், மனிசா ராமதாசு, சீத்தல் தேவி, நித்ய சிவன், தீப்தி ஜீவன்ஜி, சிம்ரன் சர்மா போன்ற வீராங்கனைகள் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

ஜெய்ப்பூரை சேர்ந்த வீராங்கனையான அவனி லெகரா துப்பாக்கிச் சுடும் போட்டியில் சிறந்து விளங்குபவர். இம்முறை பாராலிம்பிக்ஸில் பங்கேற்ற அவனி லெகரா 10 மீட்டர் SH1 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். 2021ம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக்ஸில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் 50 மீட்டர் SH1 பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தார்.

ராஜஸ்தானை சேர்ந்த மோகனா அகர்வால் பாரா துப்பாக்கிச் சுடும் போட்டியில் 10 மீட்டர் SH1 பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். 2016ல் பாரா தடகளப் போட்டிகளில் காலடி எடுத்து வைத்தவர் அப்போதிலிருந்தே பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று நிறைய பதக்கங்களை வென்று குவித்திருக்கிறார். மாநில அளவிலான பவர் லிஃப்டிங்கிலும், தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச உலகக் கோப்பை போட்டியில் கலப்பு அணி பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார். உலக அளவில் பாரா துப்பாக்கிச் சுடும் போட்டியில் சிறந்த வீராங்கனையாக திகழ்கிறார் மோகனா அகர்வால்.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ப்ரீத்தி பால் பாரா தடகள விளையாட்டுப் போட்டிகளை ஒரே இலக்காகக் கொண்டவர். இம்முறை நடைபெற்ற இரண்டு பிரிவுகளில் வெற்றி பெற்று இரண்டு பதக்கங்களையும் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கான 100 மீட்டர் டி35 பிரிவில் பங்கேற்ற இவர் அசத்தலாக 14.21 வினாடிகளிலேயே பந்தய தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். மேலும் பெண்களுக்கான 200 மீட்டர் டி35 பிரிவிலும் பங்கேற்று மீண்டும் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர், உடல் ரீதியான பல சவால்களையும் கடந்து ஒரே சமயத்தில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாரா பிஸ்டல் துப்பாக்கிச் சுடும் வீரரான ரூபினா பிரான்சிஸ், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். பாராலிம்பிக்ஸில் பிஸ்டல் துப்பாக்கிச்சுடும்
போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற சிறப்பையும் பெற்று அசத்தியிருக்கிறார். மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ரூபினா பிரான்சிஸ் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வீராங்கனையாக மிளிர்கிறார்.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன், பாரா பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் SU5 பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார். பிறப்பிலிருந்தே இடது கையில் குறைபாடுடைய இவர் வெற்றிகளை தன்வசப்படுத்தி மிளிர்கிறார்.

தமிழ்நாட்டின் மற்றொரு பெருமையாக திகழ்கிறார் மனிஷா ராமதாசு. பாரா பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் SU5
பிரிவில் வெண்கலம் பெற்றிருக்கும் இவர், பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற சிறப்புடன் இந்தியாவை பிரதிநிதித்துவப்
படுத்துகிறார். வில்வித்தையில் பெருமளவில் சாதனை படைத்து வரும் வீராங்கனை ஷீத்தல் தேவி, பாராலிம்பிக்ஸில் நடைபெற்ற வில்வித்தை போட்டிக்கான கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் வில்வித்தை வீரர் ராகேஷ் குமாருடன் இணைந்து வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார். பாரிஸில் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுத் தொடரில் முதன்
முறையாக வில்வித்தையில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் ஆகும்.

இளம் பேட்மிண்டன் வீராங்கனையான நித்ய சிவன் ஓசூரை சேர்ந்தவர். தற்போது நடந்த பாரிஸ் பாராலிம்பிக்ஸில் பேட்மிண்டன் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் SH6 பிரிவில் வெண்கலப் பதக்கத்தை பெற்று அசத்தியுள்ளார். இவர் சர்வதேச போட்டிகளில் பலமுறை தங்கப் பதக்கங்களை பெற்றிருக்கிறார் என்பது சிறப்பு. நிதி நெருக்கடி காரணத்தினால் குறைவான நாட்களிலேயே பயிற்சி பெற்றிருந்தாலும் சாதனை படைத்திருக்கிறார்.

தெலுங்கானாவை சேர்ந்த தீப்தி ஜீவன்ஜி பாராலிம்பிக்ஸில் பெண்களுக்கான 400 மீட்டர் T20 போட்டியில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியிருக்கிறார். போட்டியின் போது மிகக் குறைவான 55.16 வினாடிகளில் வெற்றியை தழுவி உலக சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் ஆசிய பாரா விளையாட்டுகளிலும், உலா சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பதக்கங்களை வென்றிருக்கிறார். பலராலும் உருவக்கேலிக்கு ஆளான இவர், அவற்றை எல்லாம் தகர்த்து வெற்றி வாகை சூடியிருக்கிறார்.

பாராலிம்பிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான 200 மீட்டர் T12 பிரிவில் வெற்றியடைந்து வெண்கலப் பதக்கத்தை பெற்றிருக்கிறார் தடகள வீராங்கனை சிம்ரன் சர்மா. பார்வைக் குறைபாடுள்ள சிம்ரன் சர்மா பாரா விளையாட்டுப் போட்டிகளால் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

The post பாராலிம்பிக்ஸில் பதக்கங்களை வென்று குவித்த இந்திய வீராங்கனைகள்! appeared first on Dinakaran.

Read Entire Article