பாராட்டு மழையில் ‘ரன் மெஷின்’ வைபவ்

2 hours ago 2

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், 35 பந்துகளில் சதம் விளாசி ராஜஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்த பீகாரை சேர்ந்த 14 வயது சிறுவன், வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டும் வகையில், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், ரூ. 10 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்துள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வானும், வைபவின் அதிரடி சாதனையை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். மிக இளம் வயதில் ஐபிஎல் போட்டிகளில் சதம் விளாசிய வீரர், ஒட்டு மொத்த ஐபிஎல் போட்டிகளில், கிறிஸ் கெயிலின் 30 பந்துகளில் சதத்துக்கு பின் அடுத்ததாக, 2வது அதிவேக சதமடித்த வீரர் என ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ள வைபவுக்கு பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தென் ஆப்ரிக்காவை சேர்ந்த நட்சத்திர வீரர் ஷான் பொலாக் கூறுகையில், ‘ஐபிஎல் வரலாற்றில் வைபவின் ஆட்டத்தை, மகத்தான சாதனை ஆட்டமாக பார்க்கிறேன்’ என்றார். வைபவின் ஆட்டத்தை, சக்கர நாற்காலியில் அமர்ந்து நேரில் பார்த்துக் கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், வைபவ் சதம் அடித்ததும் உணர்ச்சி பெருவெள்ளத்தில் உற்சாகமாக, சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து கரகோஷம் எழுப்பி வாழ்த்து தெரிவித்த வீடியோவும், இணையத்தில் வைரலானது.

‘ஆள்’ மீது அல்ல…‘பால்’ மீதுதான் கண்
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்த சிறுவன் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. அப்போது அவர் கூறியதாவது: நான் எப்போதும், யார் பந்து வீசுகிறார்கள் என்பதை பார்க்க மாட்டேன். பந்துகள் மீதுதான் என் கவனம் இருக்கும். அதனால் யார் பந்து வீசுகிறார்கள் என்று யோசனை செய்யமாட்டேன். எனவே, எனக்கு சிறிதும் பயம் இல்லை.

விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். அத்துடன் சக வீரர் ஜெய்ஸ்வால் எனக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து நேர்மறையான ஆலோசனைகளை தருகிறார். அவை எனக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கிறது. ஐபிஎல் போட்டியில் சதம் அடிக்க வேண்டும் என்ற கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது.

 

The post பாராட்டு மழையில் ‘ரன் மெஷின்’ வைபவ் appeared first on Dinakaran.

Read Entire Article