மதுரை: பாஜவுக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் அணிதிரட்ட வேண்டும் என்று மதுரையில் நேற்று தொடங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில், அக்கட்சியின் அரசியல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 5 நாள் அகில இந்திய 24-வது மாநாடு தமுக்கம் மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது. திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் மாணிக்க சர்க்கார் தலைமை வகித்தார். கட்சியின் மூத்த தலைவர் பிமான் பாசு கொடியேற்றினார். முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்றார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசினார்.