தர்மபுரி: தர்மபுரி அருகே காரில் மயங்கி விழுந்து மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி பிடமனேரி காளியப்பன் செட்டி காலனியை சேர்ந்தவர் கணேஷ் (35). மருத்துவரான இவர் பாலக்கோடு ஜக்கசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மெடிக்கல் ஆபீசராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கனிகவள்ளி (34). இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 5வயதில் மகன் உள்ளார்.
இந்தநிலையில் நேற்று ஜக்கசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று விட்டு கணேஷ் மீண்டும் மாலையில் வீட்டுக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சுமார் 7 மணியளவில் ஓசூர்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புளிக்கரை பிரிவு மேம்பாலம் அருகே வந்தபோது அவருக்கு திடீரென மயக்கம் வருவது போன்று இருந்துள்ளது. இதனால் உடனடியாக சாலையோரம் காரை நிறுத்தியுள்ளார்.
பின்னர் சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது அவர் ஏற்கனவே வரும் வழியிலேயே உயிரிழந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காரில் மயங்கி விழுந்து மருத்துவர் திடீர் சாவு appeared first on Dinakaran.