
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது சேகர் கர்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் மாதம் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து "இட்லி கடை, தேரே இஷ்க் மெயின்" ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், விக்னேஷ் ராஜா, மாரி செல்வராஜ், வெற்றிமாறன் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில், சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் தனுஷின் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த பதிவை நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தை 'ஆதிபுருஷ்' திரைப்படத்தை இயக்கிய ஓம் ராவத் இயக்க உள்ளார். இப்படத்திற்கு 'கலாம் : மிஸைல் மேன் ஆப் இந்தியா ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த பயோபிக் படம் அப்துல் கலாம் எழுதிய 'அக்னி சிறகுகள்' புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.