தேனி, ஜன.8: பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் நுழையாமல் தடுக்க முட்புதர்களை அகற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என தீயணைப்பு நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தேனி, சின்னமனூர், போடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சில நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளிலும், சில சமயங்களில் வீடுகளுக்குள்ளும் பாம்புகள் புகுந்து விடுகின்றன.
தகவல் கிடைக்கும் பட்சத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தனியார் ஆர்வலர்கள் பாம்புகளை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்து வருகின்றனர். இதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகள் கூறுகையில், கிராமங்களில் சீமை கருவேல காடுகள் அதிகமாக உள்ளன. இந்த நிலையில், காட்டுப் பகுதியில் இருந்து இரை தேடி வரும் பாம்புகள் சமீப காலமாக குடியிருப்பு பகுதிகளில் வந்து விடுகிறது.
சில நேரங்களில் பாம்புகள் வீட்டின் உட்பகுதியில் சென்று தங்கி விடுகின்றன. தகவல் கிடைத்தால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்புகளைப் பிடித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளைச் சுற்றி முட்புதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே பாம்புகள் அதிகமாக புகுந்துவிடுகின்றன. இதனால் வீட்டின் அருகிலோ, அல்லது குடியிருப்பு பகுதிகளை சுற்றியோ முட்புதர்கள் இருந்தால் அதனை அகற்றி சுத்தமாக வைத்துக் கொண்டால் பாம்புகள் நடமாட்டத்தை தடுக்க முடியும் என்றனர்.
The post பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு வீடுகளின் அருகே உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்: தீயணைப்புத்துறையினர் அறிவுரை appeared first on Dinakaran.