பாம்பு கடித்து உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

4 hours ago 2

*பொதுமக்கள் பாராட்டு

ஈரோடு : அந்தியூர் அடுத்த பட்லூரில் பாம்பு கடித்து உயிருக்கு போராடிய 11 வயது சிறுவனுக்கு கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து தொடர் கண்காணிப்பில் வைத்து காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டு குவிகிறது.ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பட்லூரை சேர்ந்தவர் செல்வி.

இவரது மகன் ஜெயசூர்யகுமார் (11). கடந்த 26ம் தேதி இரவு சிறுவன் ஜெயசூர்யகுமார் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும்போது, அச்சிறுவனுக்கு திடீரென கடுமையாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனால், அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயசூர்யகுமார் பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அப்போது, சிறுவன் மயக்கமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளான். அதே நேரத்தில் வீட்டில் சிறுவன் தூங்கிய இடத்தில் கட்டுவிரியன் பாம்பு இருப்பதை உறவினர்கள் கண்டு தெரிவித்தனர்.

இதனையடுத்து மருத்துவர்கள், சிறுவனை இரண்டு நாட்கள் வெண்டிலேட்டரில் வைத்து 20 பாட்டில்கள் விஷமுறிவு மருந்து கொடுத்து கடந்த பத்து நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து, சிறுவன் ஜெயசூர்யகுமார் முழுமையாக குணமடைந்து நேற்று வீடு திரும்பினான்.

சுயநினைவை இழந்து உயிருக்கு போராடிய அச்சிறுவனை தொடர் சிகிக்சையால் உயிரை காப்பாற்றியதையடுத்து, மருத்துவர்களுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். பட்லூர் கிராம மக்கள் அரசு மருத்துவர்களை வெகுவாக பாராட்டினர்.இது குறித்து அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகா கூறியதாவது:

நாகப்பாம்பை விட கட்டுவிரியன் பாம்பு விஷத்தன்மை அதிகம் கொண்டது. கட்டுவிரியன் பாம்பு பெரும்பாலும் இரவு நேரங்களில் கடிக்க கூடியது. கிராமங்களில் தரையில் படுத்து உறங்குபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கட்டுவிரியன் பாம்பு கடித்தால் அதற்கான எந்த தடயமும் இருக்காது. வீக்கமோ கடிபட்ட இடத்தில் வலியோ இருக்காது.

ஆனால் மூச்சு திணறல், வயிற்று வலி,சுயநினைவு இழத்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். எனவே, பாம்பு கடித்தாலோ அல்லது பாம்பு கடித்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதிய அளவிற்கு ஆன்டி வீனம்(விஷ முறிவு) மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான இந்த மருந்துகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்திருந்தால் ரூ.5 லட்சத்திற்கு அதிகமாக செலவாகி இருக்கும். ஆனால் சிறுவன் ஜெயசூர்யகுமார்க்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் பூரண குணம் பெற்றுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பாம்பு கடித்து உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article