*நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு
சித்தூர் : சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு நீதிநாள் முகாம் கலெக்டர் சுமித்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, நிலம் ஆக்கிரமிப்பு புகார்கள், முதியோர் உதவித்தொகை, சுடுகாட்டுக்கு பாதை வசதி, ரேஷன் கார்டு, இலவச வீட்டுமனை பட்டா, சுகாதார வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என 436 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.
கூட்டத்தில் சித்தூர் மாவட்டம், பைரெட்டி பள்ளி மண்டலம், மிட்டப்பள்ளி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் கிராமத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 49 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்நிலையில் மாநில அரசு பள்ளி மாற்றங்கள் குறித்து பல்வேறு அரசாணைகளை வெளியிட்டுள்ளது.
அதில், எங்கள் கிராமத்தில் இயங்கும் பள்ளியில் 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பக்கத்து கிராமமான மாதி ரெட்டி பள்ளி கிராமத்திற்கு மாற்றம் செய்துள்ளது.இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகள் 2 கி.மீ. வரை நடந்து பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மாணவர்கள் ஆபத்தான நிலையில் ஆற்றை கடந்து செல்கின்றனர்.
இதனால் எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து கலெக்டர் ஆய்வு செய்து எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியிலேயே மாணவர்கள் கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
சித்தூர் மாவட்ட வேளாண் ஊழியர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சித்தூர் மாவட்ட வேளாண் துறையில் கவுன்சலிங் நடத்தாமல் அரசு ஊழியர்களை பணியிடமாற்றம் செய்துள்ளனர்.
மொத்தம் 68 பேர் பணிபுரிந்து வரும் நிலையில், எங்களை சித்தூரில் இருந்து, குப்பம் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்துள்ளார்கள். அதேபோல் குப்பம் பகுதியில் பணிபுரிந்தவர்களை கார் வேட்டி நகரம் பகுதிக்கு மாற்றம் செய்துள்ளார்கள். இதனால் நாங்கள் 150 கிலோ மீட்டர் தூரம் வரை தினமும் வேலைக்காக சென்று வருகிறோம்.
எனவே எங்களுக்கு முறையாக கவுன்சலிங் நடத்தி பணியிட மாற்றம் செய்ய கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுதாரர்களுக்கு ஓரிரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
முகாமில் இணை கலெக்டர் வித்யாதாரி, மாவட்ட வருவாய் துறை அதிகாரி மோகன் குமார், ஆர்டிஓ ஸ்ரீநிவாஸ், ஜில்லா பரிஷத் முதன்மைச் செயல் அலுவலர் ரவிக்குமார் நாயுடு உள்பட அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அறநிலையத்துறை இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா
சித்தூர் மாவட்டம், புங்கனூர் மண்டலம், கோபிசெட்டிப்பள்ளி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த ஆட்சியில் எங்கள் கிராமத்தில் 100 பேருக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. இந்த வீட்டுமனை பட்டாவில் 80க்கும் மேற்பட்டோர் பல லட்சம் செலவு செய்து வீடுகள் கட்டி குடும்பம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் அதிகாரிகள் எங்கள் கிராமத்திற்கு வந்து, நீங்கள் வீடு கட்டியுள்ளது அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம். ஆகவே வீடுகளை காலி செய்ய வேண்டும்.
இல்லையென்றால் அறநிலையத்துறை சார்பில் வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபடுவோம் என கூறுகின்றனர். இதுகுறித்து கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
The post தினமும் 150 கி.மீ. வரை பயணிக்கின்றனர் கவுன்சலிங் நடத்தாமல் வேளாண் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் appeared first on Dinakaran.