ஈரோடு: கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பு கடித்தும் எந்த அறிகுறியும் இல்லாமல்,
சுயநினைவின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 11 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உயிரைக் காப்பாற்றி உள்ளனர். ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் அருகே செல்வி என்பவரின் 11 வயது மகனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. ஜூன் 26ல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, சிறுவன் ஜெயசூர்யகுமாருக்கு மூச்சுத் திணறல், வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது மகனை வெள்ளித்திருப்பூர் மற்றும் அந்தியூர் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றுள்ளார் தாயார் செல்வி.
சிறுவன் சுயநினைவை இழந்து மயங்கியதால் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிறுவனுக்கு சுவாசம், இதயதுடிப்பு குறைந்ததால், செயற்கை சுவாசமளித்து தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்தனர். சிறுவனின் உடல் நிலையை ஆராய்ந்ததில் கட்டுவிரியன் பாம்பு கடித்திருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். பாம்பு கடித்தது தெரிய வந்ததை அடுத்து உடனடியாக அரசு மருத்துவர்கள் விஷ முறிவு மருந்து செலுத்தியுள்ளனர். பாம்பு விஷமுறிவு மருந்து 20 பாட்டில்கள் (20 Vial – Anti Venom)| செலுத்தி தீவிர சிகிச்சையளித்ததில் 72 மணி நேரத்திற்குப் பின் சிறுவனுக்கு நினைவு திரும்பியது.
தொடர்ந்து 11 நாட்கள் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியதும் சிறுவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். சுவாசம் சீராகவும், தசை நார்கள் செயல்பாட்டிற்கு வரவும் சிறுவனுக்கு பிசியோதெரபி சிகிச்சையும் தரப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்திருந்தால் ரூ.5 லட்சத்துக்கும் மேல் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் மருத்துவர்கள், “கட்டுவிரியன் கடித்தால் வீக்கம், வலி இருக்காது, ஆனால் மூச்சுத்திணறல், வயிற்றுவலி, சுயநினைவு இழத்தல் இருக்கும். பாம்பு கடித்தாலோ, கடித்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை செல்ல வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான அளவு பாம்பு விஷ முறிவு மருந்துகள் இருப்பு உள்ளது.” இவ்வாறு தெரிவித்தனர். உயிர் பிழைப்பது அரிது என்ற ஆபத்தான நிலையில் இருந்த மகனை காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு தாய் செல்வி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
The post பாம்பு கடித்த அறிகுறியே இல்லாமல் சுயநினைவின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!! appeared first on Dinakaran.