சென்னை: பாமக செயற்குழுக் கூட்டத்தை ராமதாஸ் நாளை நடத்த உள்ள நிலையில், நிர்வாகக் குழு கூட்டத்தை அன்புமணி கூட்டுகிறார். பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. கட்சி இரண்டாக பிளவு பட்டுள்ள நிலையில் கட்சியை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் ராமதாஸ் மேற்கொண்டு வருகிறார். கட்சியில் அன்புமணி ஆதரவாளர்களை ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களுக்கு பதவி வழங்கி வரும் ராமதாஸ் புதிய நிர்வாகிகளை வைத்து கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளார். தைலாபுரத்தில் நேற்று முன்தினம் பாமக தலைமை நிர்வாக குழுவை கூட்டி ஆலோசனை செய்த ராமதாஸ் பழைய குழுவை கலைத்துவிட்டு புதிய நிர்வாகிளை நியமித்தார்.
இந்த குழுவில் இருந்த அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களை ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டு தனக்கு விசுவாசமானவர்களை அந்த பதவில் அமர வைத்தார். லட்டர் பேடில் இருந்தும் அன்புமணி பெயரை தூக்கிவிட்டார். இந்நிலையில் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் பாமக செயற்குழு கூட்டம் நாளை(8ம் தேதி) காலை 10 மணிக்கு ராமதாஸ் தலைமையில் கூடுகிறது. இந்த கூட்டதில் பாமக தலைமை நிர்வாகிகள், பாமக மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என 550 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கவுர தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளாளர் சையது முகம்மது உசேன், வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, மகளிர் அணி சுஜாதா கருணாகரன், அருள் எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஒரு சில மாவட்ட தலைவர்களுக்கு மட்டும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தில் அன்புமணி தலைமையில் நாளை பாமக நிர்வாக குழு கூட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ள நிலையில் நிர்வாகக் குழு கூட்டத்துக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார். ராமதாஸ் தலைமையில் செயற்குழு, அன்புமணி தலைமையில் நிர்வாக குழு கூடுவதால் பாமகவினர் குழப்பம் அடைந்துள்ளனர்.
The post திண்டிவனத்தில் ராமதாஸ், சென்னையில் அன்புமணி கூட்டம்: ஒரே நாளில் இருவரும் அழைப்பு விடுத்துள்ளதால் பாமகவினர் குழப்பம் appeared first on Dinakaran.