ஊட்டி அருகே குடியிருப்பில் சிறுத்தை நடமாட்டம்-மக்கள் பீதி

3 hours ago 4


* தாவரவியல் பூங்காவில் முகாமிட்ட கரடியால் பரபரப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தற்போது வனவிலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, சிறுத்தை, கரடி, காட்டுமாடு, யானை மற்றும் புலி போன்ற வனவிலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. வனவிலங்குகள் உணவு தேடி மக்கள் வசிக்கும் பகுதி வரும்போது மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், ஊட்டி அருகே உள்ள கெந்தோரை பகுதியில் ஒரு வீட்டின் முன் இரவு நேரத்தில் வளர்ப்பு நாயை வேட்டையாட சிறுத்தை ஒன்று பதுங்கி வரும் வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் காட்டு மாடுகள் கூட்டமாக வலம் வருவதுடன், சாலையில் படுத்து கொள்கின்றன. இதேபோல் பெங்கால் மட்டம், தேவர் சோலை, கைகாட்டி, நுந்தளாமட்டம் ஆகிய பகுதிகளில் சாலைகளில் கூட்டம் கூட்டமாக காட்டு மாடுகள் வலம் வருகின்றன. காட்டு மாடுகளை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். காட்டு மாடுகள் மக்கள் வசிக்கும் பகுதி மற்றும் சாலைகளில் வலம் வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று இரவு 9.30 மணியளவில் கண்ணாடி மாளிகை அருகே உள்ள ஒரு மரத்தில் பயங்கர சத்தம் கேட்டது. பூங்கா ஊழியர்கள் அங்கு வந்து டார்ச் அடித்து பார்த்தபோது கரடி ஓன்று மரத்தில் ஓய்வெடுத்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கரடியை வனத்திற்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர். மாலை 6 மணியுடன் பூங்கா மூடப்பட்ட நிலையில் பயணிகள் யாரும் இல்லை. இதனால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘தாவரவியல் பூங்காவை சுற்றிலும் வனப்பகுதிகள் உள்ளன. இதனால், வனவிலங்குகளின் நடமாட்டம் என்பது இயல்பான ஒன்றுதான். மனித-வனவிலங்கு மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இவற்றின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மக்கள் அச்சப்படத் தேவையில்லை. குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்’’ என்றனர்.

The post ஊட்டி அருகே குடியிருப்பில் சிறுத்தை நடமாட்டம்-மக்கள் பீதி appeared first on Dinakaran.

Read Entire Article