பாம்பன் ரயில் பாலம் திறந்த ஒரு மாதத்தில் 2.50 லட்சம் பயணிகள் ராமேஸ்வரம் வருகை

8 hours ago 2

ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்பட்ட பிறகு, கடந்த ஒரு மாதத்தில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் ரயில் மூலம் ராமேஸ்வரத்துக்கு வந்ததாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி கடந்த ஏப்.6ம் தேதி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து ஏப்.7 முதல் ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு தினசரி 3 பயணிகள் ரயில்கள், சென்னைக்கு தினசரி 3 விரைவு ரயில்கள், திருச்சிக்கு ஒரு விரைவு ரயில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

மேலும், ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வாரம் இருமுறை அதிவிரைவு விரைவு ரயில், ராமேஸ்வரம்-கோவை வாராந்திர விரைவு ரயில், ராமேஸ்வரம்-பெரோஸ்பூர் வாராந்திர விரைவு ரயில், திருப்பதி வாரம் இருமுறை விரைவு ரயில், ஓகா வாராந்திர விரைவு ரயில், புவனேஷ்வர் வாராந்திர விரைவு ரயில் ஆகிய என 16 ரயில் சேவைகள் உள்ளன.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு புதிய பாலம் திறக்கப்பட்டப் பிறகு சராசரியாக 8 ஆயிரம் முதல் 8,500 பயணிகள் வரை நாளொன்றுக்கு வந்து செல்கின்றனர். இது வார விடுமுறை மற்றும் அமாவாசை நாட்களில் இன்னும் அதிகமாகும். மாதத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் ராமேஸ்வரத்திற்கு ரயில் மூலம் வந்துள்ளனர். ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தற்போது வரையிலும் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் முழுமைடைந்து அனைத்து ரயில் சேவைகளும் பயன்பாட்டில் வரும்போது பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்’’ என தெரிவித்தனர்.

The post பாம்பன் ரயில் பாலம் திறந்த ஒரு மாதத்தில் 2.50 லட்சம் பயணிகள் ராமேஸ்வரம் வருகை appeared first on Dinakaran.

Read Entire Article