ராமேஸ்வரம்: பாம்பன் புதிய பாலம் வழியாக 2 ஆண்டுகளுக்கு பிறகு, மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 55 கி.மீ வேகத்தில் விரைவு ரயில் பயணிகளின்றி இன்று காலை இயக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணிகளுடன் ரயில்களை இயக்க கடந்த 2022ல் ரயில்வே நிர்வாகம் தடை விதித்தது. இதனால், ராமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் புதிதாக இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் கட்டும் பணி துவங்கியது. இப்பணி துரிதப்படுத்தப்பட்டு கடந்தாண்டு இறுதியில் நிறைவடைந்தது. பல்வேறு ஆய்வு பணிகளுக்கு பிறகு புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. பிப்ரவரி மாதத்தில் புதிய ரயில் பாலத்தை திறக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் துவக்கியுள்ளது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை பயணிகள் இன்றி ரயில் பெட்டிகள் மட்டும் புதிய ரயில் பாலம் வழியாக இயக்கப்பட்டன. நேற்று இரவு கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு புறப்பட்ட விரைவு ரயில் இன்று அதிகாலை 5 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இந்த ரயிலில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி விடப்படனர். பின் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு பயணிகள் இன்றி 18 பெட்டிகளுடன் புறப்பட்ட விரைவு ரயில் 55 கி.மீ வேகத்தில் புதிய ரயில் பாலம் வழியாக ராமேஸ்வரம் ரயில் நிலையம் வந்தடைந்தது. இங்கு ரயில் பெட்டிகள் முழுமையாக சுத்தம் செய்த பிறகு பகல் 1 மணிக்கு மேல் மீண்டும் பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக மண்டபம் ரயில் நிலையம் சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post பாம்பன் புதிய பாலம் வழியாக மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 55 கி.மீ வேகத்தில் விரைவு ரயில் இயக்கம் appeared first on Dinakaran.