ஈ.சி.ஆரில் பெண்கள் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற விவகாரம்: காவல்துறை துணை ஆணையர் விளக்கம்

3 hours ago 1

சென்னை: ஈ.சி.ஆரில் பெண்கள் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற விவகாரத்தில் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் 2க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒருகாரில் ஈ.சி.ஆர். சாலையில் நள்ளிரவு சென்றுகொண்டிருந்தனர். அப்போது, காரில் வந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த பெண்கள் கூச்சலிட்டுள்ளனர்.

திடீரென அந்த காரில் இருந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்கள் பயணித்த காரை நோக்கி வேகமாக ஓடி வந்தார். இதனால், மேலும் அதிர்ச்சியடைந்த பெண்கள் காரை ரிவர்ஸ் எடுத்து வேகமாக மாற்று பாதையில் சென்றனர். ஆனாலும், அந்த பெண்கள் பயணித்த காரை பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல் மீண்டும் இடைமறித்தது. பெண்கள் தங்கள் உறவினர் வீடு அருகே வரும் வரை அந்த இளைஞர்கள் காரில் துரத்தி வந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களை காரில் துரத்தியது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே பெண்கள் சென்ற கார் இளைஞர்களின் காரை உரசி சென்றதாகவும், அதற்கு நியாயம் கேட்க இளைஞர்கள் காரை நிறுத்த சொல்லியும் பெண்கள் காரை நிறுத்தாமல் சென்றதாகவும், காரை நிறுத்தி நியாயம் கேட்கவே இளைஞர்கள் காரை துரத்தியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், ஈ.சி.ஆரில் பெண்கள் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற விவகாரம் தொடர்பாக காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன் விளக்கமளித்தார். அதில்,

மாணவர் உட்பட 4 பேர் கைது

பெண்கள் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற வழக்கில் கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஈ.சி.ஆர். வழக்கில் 7 பேர் ஈடுபட்டுள்ளனர்; இன்னும் 3 பேர் கைது செய்யப்பட வேண்டும். பெண்கள் ஓட்டிச் சென்ற கார் இளைஞர்கள் வந்த காரை இடிக்கவில்லை என துணை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார். காரை துரத்திய சம்பவத்தில் கைதான நால்வரில் சந்துரு என்பவர் மீது 2 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எஃப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம் இல்லை

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் தாமதம் ஏற்படவில்லை என பள்ளிக்கரணை துணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். புகார் வந்தவுடனே சி.எஸ்.ஆர். பதிவு செய்து முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது .

புகார் அளிக்கப்பட்ட 10 நிமிடங்களில் விசாரணை

புகார் அளிக்கப்பட்ட 10 நிமிடங்களில் காவல்துறையினர் வீட்டிற்கே சென்று விசாரித்தனர். சென்னை ஈ.சி.ஆர். விவகாரம் தொடர்பாக சென்னை பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் விளக்கம் அளித்தார்.

ஈசிஆர் விவகாரம்: அரசியல் தொடர்பு இல்லை

சென்னை ஈ.சி.ஆர்.சாலையில் பெண்கள் சென்ற காரை பின் தொடர்ந்த விவகாரத்தில் அரசியல் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

 

The post ஈ.சி.ஆரில் பெண்கள் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற விவகாரம்: காவல்துறை துணை ஆணையர் விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article