பாபா சித்திக் படுகொலை.. பிரபல தாதா கும்பல் பொறுப்பேற்பு

1 month ago 8

மும்பை:

மராட்டிய மாநிலத்தில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மந்திரியுமான பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை பாந்திரா கிழக்கு நிர்மல் நகர், கோல்கேட் மைதானத்திற்கு அருகில் உள்ள அவரது மகன் ஷீசான் சித்திக்கின் அலுவலகத்திற்கு வெளியே நேற்று மாலை இந்த படுகொலை நடந்துள்ளது. மூன்று நபர்கள் இந்த கொலையை செய்துள்ளனர். அவர்களில் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாபா சித்திக் படுகொலைக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான கும்பல் பொறுப்பேற்றுள்ளது. துப்பாக்கி சூடு நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பிஷ்னோய் கும்பல் சமூக ஊடகத்தில் இந்த தகவலை பதிவிட்டுள்ளது. இந்த தகவல் ஷிபு லோங்கர் என்ற பெயரிலான பேஸ்புக் கணக்குடன் இணைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, பிஷ்னோய் கும்பலின் கூட்டாளியான ஷுபம் ராமேஷ்வர் லோங்கர்தான், ஷிபு லேங்கராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த கோணத்தில் மத்திய விசாரணை அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷுபம் லோங்கர் இந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் நெட்வொர்க்குடன் வலுவான தொடர்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. போலீஸ் விசாரணையின்போது, லாரன்ஸின் நெருங்கிய சகோதரரான அன்மோல் பிஷ்னோயுடன் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டதை ஷுபம் ஒப்புக்கொண்டார்.

சித்திக்கை கொல்வதற்காக அவரது அன்றாட நடவடிக்கைகளை கொலையாளிகள் பல மாதங்களாக கண்காணித்துள்ளனர். அவரது வீடு மற்றும் அலுவலகத்தை உளவு பார்த்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். அவரை தீர்த்து கட்டுவதற்காக ஒவ்வொருவருக்கும் தலா 50,000 ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டதாகவும், படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

காவல்துறையின் தகவலின்படி, துப்பாக்கியுடன் வந்த மூன்று நபர்கள் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளனர். மூவரில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் அரியானாவைச் சேர்ந்த குர்மாயில் பல்ஜித் சிங் (வயது 23) மற்றொருவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தரம்ராஜ் காஷ்யப் (வயது 19). மூன்றாவது நபர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சிவ குமார் கவுதம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கொலைக்கு மூளையாக இருந்ததாக கூறப்படும் நான்காவது நபரும் தப்பி ஓடி உள்ளார். கொலையில் தொடர்புடைய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தரம்ராஜ் காஷ்யப் மற்றும் சிவ குமார் கவுதம் இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆவர். தாதா கும்பலில் சேர்வதற்கு முன்பு புனேவில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவர் மீதும் சொந்த ஊரில் எந்த குற்ற வழக்குகளும் இல்லை. ஆனால் அவர்கள் பஞ்சாப் சிறையில் இருந்த காலத்தில், பிஷ்னோய் கும்பலுடன் பழகி அதன்மூலம் புகழ் பெற எண்ணியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சல்மான் கான்

இதற்கிடையே, மும்பையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த சல்மான் கானின் வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 நபர்கள் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோயுடன் தொடர்புடைய அந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சல்மான் கானை படுகொலை செய்வதற்காக பிஷ்னோய் கும்பல் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டத்தை வெளியிட்டதாகவும், இந்த திட்டம் ஆகஸ்ட் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை பல மாதங்களாக உருவாக்கப்பட்டது என்றும் காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article