
விக்கிரமசிங்கபுரம்,
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள உலகம்மை உடனுறை பாபநாச சுவாமி கோவில் பிரசித்தி பெற்றதாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.
விழாவில் நேற்று காலை 8.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், மாலை 5.30 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜை, பிம்ப சுத்தி, நாடி சந்தானம் உள்ளிட்டவை நடைபெற்றது.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக அதிகாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், 6-ம் கால யாகசாலை பூஜை, மஹா பூர்ணாகுதி, காலை 7.15 மணிக்கு யாத்ராதானம், பிரதான கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.
7.45 மணிக்கு பாபநாச சுவாமி விமானங்கள் மற்றும் ராஜகோபுரம், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், 8.10 மணிக்கு சுவாமி மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், 8.20 மணிக்கு உலகம்மை மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் வீதி உலா நடைபெறும். கும்பாபிஷேகத்தை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி தலைமையில் செயல் அலுவலர் ராஜேந்திரன், தக்கார் மற்றும் உதவி ஆணையர் சுப்புலட்சுமி, ஆய்வாளர் கோமதி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
அம்பை துணை போலீஸ் சதீஷ்குமார் தலைமையில் 600 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 100 தற்காலிகமாக கண்காணிப்பு கேமராக்களும், 4 கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பக்தர்களுக்கு கூட்ட நெரிசல் இல்லாமல் சரி செய்வது, பக்தர்களுக்கான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 140 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாபநாசம் அகஸ்தியர்பட்டியில் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று வழிபாடு செய்து வருகின்றனர்.