அதிர்ச்சி சம்பவம்.. நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை

3 hours ago 3


நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

அதேபோன்று, ராணுவக் கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இந்நிலையில் 2025-2026-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் நீட் தேர்வை எழுத சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்ள 31 மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வு நடக்கிறது. சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

நீட் தேர்வு இன்று தொடங்கும் நிலையில் தேர்வுக்கு அஞ்சி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று நீட் தேர்வு நடைபெறும்நிலையில், மாணவி கயல்விழி, அச்சம் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

மாணவி கயல்விழியின் உடலை மீட்ட மேல்மருவத்தூர் போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2017-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு முந்தைய மாதமும், நீட் தேர்வு முடிவு வெளியாவதையொட்டிய சில மாதங்களும், தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த இரு மாதத்தில் 5 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article