சமீபத்தில் திருநெல்வேலியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆயுதங்களுடன் வந்ததனால் இடைநீக்கம் செய்யப்பட்டதாகச் செய்தித்தாள்களில் செய்தி வெளிவந்தது. அண்மைக் காலமாகப் பரவலாக பள்ளி மாணவர்களிடையே ஆயுதங்கள் புழக்கம் மட்டும் அல்ல போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கமும் காணப்படுகிறது. நகர் பகுதிகளில் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் ஹான்ஸ், கூல் லிப் போன்ற போதைப் பொருட்கள் மிகவும் எளிதாகக் கிடைக்கின்றன. அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் அதையும் கடந்து மாணவர்களைக் குறி வைத்து போதைப்பொருள் கடத்தல் காரர்கள் செயல்பட்டுவருகின்றனர்.
இதுபோன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது உடல்நலத்திற்குக் கேடு விளைவிப்பதோடு வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடும் என்பதை மறந்து இதனைப் பயன்படுத்துவதை ஒரு ‘கெத்து’என்று நினைக்கின்றனர் தற்கால மாணவர்கள்.
அதேபோல் சமூக ஊடகங்களில் வெளியாகும் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் பள்ளி மாணவர்களிடையே அதிகரித்திருக்கிறது. இதனைச் சாதகமாக மாற்றிக் கொள்வதற்காகச் சில ஆசிரியர்கள் பாடங்களையும், வினாக்களையும் இன்ஸ்டா ரீல்சாக வெளியிட்டுவருகின்றனர். பள்ளிக் கல்வித்துறையும் பல ஆணைகளையும் சுற்றறிக்கைகளையும் இன்ஸ்டா ரீல்சாக வெளியிடுகின்றது. ஆனாலும் மற்ற குறும்புத் தனமான ரிலீஸ் வசனங்களை மனப்பாடமாகப் பள்ளிகளில் கூறும் மாணவர்கள் பாடம் சார்ந்த ரீல்ஸ்களைக் கண்டுகொள்வதில்லை. புதிதாக வரும் திரைப்படப் பாடல்களை நோட்டுகளில் எழுதி வைத்துக்கொண்டு அதனை எளிதாக மனப்பாடம் செய்து விரைவாகப் பாடிக் காட்டுகின்றனர். ஆனால் பாடம் சார்ந்த மனப்பாடப் பாடல்களை ஒப்பிக்கவோ, எழுதவோ தடுமாறுகின்றனர். பல மாணவர்கள் கேட்கக் கூசும் சொற்களை மிக இயல்பாக ஆசிரியர்கள் காதில் விழும்படியே பேசிக் கொள்கின்றனர். அவர்கள் பேசுவது கெட்ட வார்த்தை அல்ல அவர்கள் கேட்ட வார்த்தை என்று ஒரு ஆசிரியர் நண்பர் கூறினார். மாணவர்கள் வசிப்பிடப் பகுதிகளில் மக்கள் என்ன பேசிக் கொள்கின்றனரோ அதையே மாணவர்களும் பிரதிபலிக்கின்றனர்.
2 கே கிட்ஸ் என்று அழைக்கப்படும் தற்கால மாணவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாக மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்களாக இருக்கின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் பள்ளிகள் செயல்படாமலிருந்ததே மாணவர்களின் இதுபோன்ற நிலைக்கு காரணம் என்று பெரும்பாலானவர்கள் கூறுகின்றனர். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகளாக இருக்கின்றார்கள். அல்லது ஒற்றைப் பெற்றோரிடமோ பாதுகாவலரிடமோ வளர்ப்பவர்
களாக இருக்கிறார்கள். பெற்றோரைப் பிரிந்து வாழும் குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்படுவது இயல்பு. நான் பணியாற்றக்கூடிய பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெரும்பாலான தந்தைகள் வேலை நிமித்தமாக சென்னை, திருச்சி, கேரளா அல்லது வட இந்திய மாநிலங்களில் வசிக்கின்றனர். பெற்றோரைப் பிரிந்து வாழும் மாணவர்களிடம் இத்தகைய நடத்தை மாற்றங்களை நாங்கள் கண்கூடாக பார்க்கிறோம். குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் சண்டையிட்டுக் கொள்வதும் அவர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள் விரும்பத் தகாத நடத்தை மாற்றத்தை பள்ளிகளில் வெளிப்படுத்துகின்றனர். ஒரு பள்ளியில் ஒரு மாணவர் வகுப்பறைக்குக் கைபேசி எடுத்து வருகிறார் அதனைக் கண்டுபிடித்த தலைமை ஆசிரியர் அதனைப் பறிமுதல் செய்து பெற்றோரை வரவழைத்து கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்புகிறார். மீண்டும் அதே மாணவன் ஒரு வாரம் கழித்து கைபேசியோடு வகுப்புக்கு வருகிறான். அதனைக் கண்டறிந்த வகுப்பு ஆசிரியர் அதனைப் பறிமுதல் செய்கிறார். அந்த மாணவனின் தந்தை வகுப்பு ஆசிரியருக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் சென்னையில் இருக்கிறேன் என்னால் பள்ளிக்கு வர முடியாது. என் மனைவியும் ஊரில் இல்லை. எனவே, நீங்கள் கைபேசியை என் மகனிடம் கொடுத்து அனுப்புங்கள் என்று வேண்டுகோள் விடுகிறார். நீங்கள் ஒரு கடிதமாக எழுதிக் கொடுங்கள் என்று கேட்டதற்கு நான் சென்னையில் இருக்கிறேன் எப்படி எழுதுவது என்றார். எழுதி வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள் என்று அந்த ஆசிரியர் கூற… அதற்கு நான் அனுப்ப வேண்டுமா அல்லது கல்வி அமைச்சரின் உதவியாளர் வழியாக அனுப்பட்டுமா என்று மிரட்டுகிற தொனியில் பேசுகிறார்.
குழந்தைகள் மீண்டும் மீண்டும் தவறான பாதையில் செல்வதற்கு இதுபோன்ற பெற்றோர்களும் ஒரு காரணமாக அமைந்துவிடுகின்றனர். மாணவர்கள் கைபேசியைக் கொண்டு காணொலிகள், படங்கள் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுகின்றனர். அந்த செய்தியும் செய்தித்தாள்களில் வெளிவந்தது. என்னதான் வகுப்பறையில் நீதி போதனை, உயர்கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி, மன்றச் செயல்பாடுகள் என்று மாணவர்களை எப்போதும் தடம் மாறாமல் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு செயல்பாடுகளை பள்ளியில் கொடுத்தாலும், தற்கால மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்துவது என்பது ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. குடும்பம், சமூகம் பள்ளி ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து தான் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். மேற்கண்ட மூன்று சூழல்களில் ஒன்றில் குறைபாடு இருந்தாலும் அதில் சிக்கல்தான் ஏற்படுகிறது. ஆசிரியர்களை இரண்டாவது பெற்றோர் என்கிறோம். ஆனால் அந்தக் குழந்தை தவறு செய்யும்போது சிறு தண்டனைகூட வழங்குவதற்கு ஆசிரியர்களுக்கு அதிகாரம் இல்லாதபோது அவர்கள்தான் என்ன செய்யமுடியும்.
ஆண் பெண் என இருபாலர் பயிலும் பள்ளியில் எதிர் பால் மீது ஏற்படும் இனக்கவர்ச்சியைக் காதல் என்று தவறாகப் புரிந்து கொண்டு படிப்பில் கவனம் செலுத்தாமல் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ளும் பழக்கமும் ஒருசில இடங்களில் காணப்படுகிறது. நூறு விழுக்காடு தேர்ச்சி, உயர்ந்தபட்ச சராசரி மதிப்பெண் என ஆசிரியர்களுக்கு அதிகாரிகளால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த நெருக்கடிகளில் கடிவாளம் கட்டப்பட்ட குதிரைகளைப் போல் ஆசிரியர்கள் ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தவிர பல்வேறு பணிகளை ஆசிரியர்களுக்குக் கொடுத்ததால் எதையும் முழுமையாகச் செய்து முடிக்க இயலாத நிலைதான் உள்ளது. இந்த நெருக்கடிகளிலிருந்து மாணவர்களை மீட்டு நல்வழிப்படுத்த வேண்டும் எனில் பெற்றோர், ஆசிரியர், அலுவலர்கள், சமுதாயம் என அனைத்துத் தரப்பும் ஒருங்கிணைந்து மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். கடந்த தலைமுறையினருக்கு இருந்த பொறுப்புணர்வு இந்தத் தலைமுறை எனக்கு இல்லை என்று கூறும் அளவிற்கு பொறுப்புகளை தட்டிக் கழிக்கும் பழக்கம் அனைவரிடமும் காணப்படுகிறது. இத்தகைய நிலை சமூக சீர்கேட்டைதான் ஏற்படுத்தும். அத்தகைய மனப்போக்கு மாறினால்தான் மாணவர் சமூகம் முன்னேற்றப்பாதையில் பயணிக்கும். அது குறித்து அனைவரும் சிந்திப்போம் வலிமைமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவோம்.
The post பாதை மாறும் பள்ளி மாணவர்கள்! : பெற்றோர்களே உஷார்!! appeared first on Dinakaran.