நியூயார்க்: பாகிஸ்தான் தீவிரவாதத்தை தூண்டும் மூர்க்கத்தனமான நாடு என்று ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் துணை நிரந்தர பிரதிநிதி யோஜ்னா படேல் குற்றம்சாட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரவாத எதிர்ப்பு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பிரதிநிதி குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து பேசிய இந்தியாவிற்கான நிரந்தர பிரதிநிதி யோஜ்னா படேல் கூறுகையில், ‘‘இந்தியாவிற்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவும், பிரசாரத்தில் ஈடுபடவும், இந்த மன்றத்தை ஒரு குறிப்பிட்ட குழு தவறாக பயன்படுத்தி குறைமதிப்பிற்கு உட்படுத்தியது துரதிஷ்டவசமானது.
சமீபத்தில் தொலைக்காட்சி நேர்காணலில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புக்களை ஆதரிப்பது, பயிற்சி மற்றும் நிதியளித்த வரலாற்றை பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக்கொண்டதை முழு உலகமும் கேட்டது. இந்த வெளிப்படையான ஒப்புதல் வாக்குமூலம் யாரையும் ஆச்சரியப்படுத்தவில்லை.பாகிஸ்தான் உலகளாவிய தீவிரவாதத்தை தூண்டிவிட்டு பிராந்தியத்தை சீர்குலைக்கும் மூர்க்கத்தனமான நாடாக திகழ்கிறது. உலகம் இனி கண்மூடித்தனமாக இருக்க முடியாது” என்றார்.
The post பாதுகாப்பு அமைச்சரின் வெளிப்படையான ஒப்புதல் தீவிரவாதத்தை தூண்டும் மூர்க்கத்தனமான நாடு பாக்.: ஐநாவில் இந்தியா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.