பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் மீது போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும்: எடப்பாடி கோரிக்கை

3 weeks ago 4

சென்னை: சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி ெபாதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அளித்த பேட்டி: அண்ணா பல்கலைக்கழக மாணவி கொடுத்த புகார், பத்திரிகையில் வெளிவந்தது எப்படி? அதில் வந்த செய்தியில், அந்த சாருடன் கொஞ்சம் நேரம் இரு என்று செய்தியில் வந்துள்ளது. யார் அந்த சார் என்றுதான் மக்கள் கேட்கிறார்கள். இன்னும் காவல் துறையிடம் பதில் இல்லை. காவல் உயர் அதிகாரி 100க்கு புகார் வந்ததால், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்றோம் என்கிறார்.

அடுத்த நாள் உயர் கல்வித்துறை அமைச்சர், உறுப்பினர் குழுவில் உள்ள யாரும் புகார் கொடுக்கவில்லை என்கிறார். இதுபோன்ற சந்தேகம் எழுப்பப்பட்ட காரணத்தினால்தான், அதிமுக போராட்டம் நடத்துகிறது. நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரி சென்று கண்ணாடி பாலம் திறந்து வைத்திருக்கிறார். நான் முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட திட்டம்தான் அது. திருவள்ளுவர் – விவேகானந்தர் பாறையை இணைக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்தேன்.

மாநில அரசு பாதி பணம், ஒன்றிய அரசு பாதி பணம் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில்தான் சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டது. அதன்பிறகு கொரோனா என்பதால் இந்த பணி தடைபட்டது. பின்னர் திமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டது, பணிகள் முடிந்து, தற்போது திறக்கப்பட்டுள்ளது. பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்கள் காவல் துறையில் புகார் அளித்தாலும் எடுக்க மறுக்கிறார்கள். அண்ணா பல்கலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருக்கிறார். அந்த புகார் மீது தீவிரமாக விசாரிக்க வேண்டும். விசாரிக்காமல், ஒருவர்தான் குற்றவாளி என்று கூறுவதால்தான் சந்தேகம் வருகிறது.

The post பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் மீது போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும்: எடப்பாடி கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article