பாண்ட்யா இல்லை.. மும்பை தக்கவைக்க வேண்டியது அந்த 3 வீரர்களை மட்டும்தான் - இந்திய முன்னாள் வீரர்

2 months ago 18

மும்பை,

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம், ஏலத்தில் எவ்வளவு செலவிடலாம் என்பது குறித்து அணி உரிமையாளர்களுடன், ஐ.பி.எல். நிர்வாகம் கடந்த ஜூலை மாதம் விரிவாக விவாதித்தது. அப்போது அணி நிர்வாகிகள் பல்வேறு யோசனைகளை தெரிவித்தனர். அது குறித்து பெங்களூருவில் நேற்று நடந்த ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதன் முடிவில் 18-வது ஐ.பி.எல். போட்டிக்கு ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைக்க அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் ஆர்.டி.எம். என்ற சிறப்பு சலுகை மூலம் மேலும் ஒரு வீரரை தக்கவைக்க முடியும். அதாவது தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்படும் வீரரை மாற்று அணி ஏலத்தில் அதிகபட்சமாக எடுக்கும்பட்சத்தில் அந்த வீரரை அதே தொகைக்கு ஆர்.டி.எம். -ஐ பயன்படுத்தி தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறையை ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று அறிவித்தது.

இதனால் ஒவ்வொரு அணியிலும் எந்தெந்த வீரர்களை தக்கவைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணி மீது கூடுதல் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் மும்பை அணியிலிருந்து ரோகித் சர்மா வெளியேறுவாரா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் ரோகித், சூர்யகுமார், பும்ரா ஆகியோர்தான் மும்பை தக்க வைக்க வேண்டிய டாப் 3 வீரர்கள் என முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். அத்துடன் பாண்ட்யாவை விட பும்ராதான் மதிப்புள்ள முக்கியமான வீரர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-"ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மும்பை தக்க வைக்க வேண்டிய 3 வீரர்கள் என்று நான் சந்தேகமின்றி சொல்வேன். இந்த 3 வீரர்களையும் ஏலத்தில் விடுவது அசாத்தியமற்றது. வேண்டுமானால் பாண்ட்யாவுக்கு மும்பை ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். அவரும் ஏலத்தில் விட்டால் வாங்க முடியாத வீரராக உள்ளார். இருப்பினும் அடிக்கடி காயத்தை சந்திக்கும் அவரை பெரிய தொகை கொடுத்து வாங்க மற்ற அணிகள் தயங்கலாம்.

எனவே அவருக்காக ஆர்டிஎம் வைத்திருந்தால் அதை மும்பை பயன்படுத்தலாம். இது ஒரு வீரரின் நட்சத்திர அந்தஸ்து அல்லது பவரை பொறுத்து முடிவு செய்யப்பட ஒன்று என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் தற்போதைய மார்க்கெட்டில் ஹர்திக் பாண்ட்யாவை விட பும்ரா அதிக மதிப்பை கொண்டுள்ளார். அவரை வெளியிட்டால் மீண்டும் பெறுவது கடினமானதாகி விடும்" என்று கூறினார்.

Read Entire Article