'இந்த முறை மட்டும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் பங்கேற்றது ஏன்?' - சீமான் கேள்வி

4 hours ago 2

சென்னை,

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 44-வது ஆண்டு நினைவு தினம் இன்று (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நமது பெருமைக்குரிய அடையாளம் நாம் தமிழர் என்பதுதான் என்பதை உலகிற்கு உரக்கச் சொன்னவர் சி.பா.ஆதித்தனார். பாமரர்களும், ஏழை எளிய உழைக்கும் மக்களும் உலக நடப்பு செய்திகளை அறிந்து கொள்வதற்காக பத்திரிகை நடத்தியவர். நாம் தமிழர் கட்சியை நிறுவிய தலைவர் சி.பா.ஆதித்தனாரின் புகழ் போற்றும் நாளான இன்று, கட்சி சார்பில் நன்றியுடன் புகழ் வணக்கத்தை செலுத்துவதில் பெருமை அடைகிறோம்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிமான் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

"பிரதமரை சந்திக்க தமிழக முதல்-அமைச்சருக்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் இருந்தன. எண்ணற்ற சிக்கல்கள் நமக்கு வந்தபோது அவற்றை பிரதமரிடம் பேசி சரிசெய்திருக்கலாம். மூன்று நிதி ஆயோக் கூட்டங்களை நிராகரித்த முதல்-அமைச்சர், இந்த முறை மட்டும் அந்த கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது இந்தியாவை ஆதரித்து முதன் முதலில் பேரணி நடத்தியவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளே பேரணி நடத்தாதபோது, தமிழக முதல்-அமைச்சர் மட்டும் பேரணி நடத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போரில் என்ன நியாயம் இருக்கிறது. இந்தியாவிற்குள் புகுந்து அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளை என்ன செய்தீர்கள்? நமது நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு எப்படி தைரியம் வந்தது?

தாக்குதல் நடத்தும் எண்ணம் வந்தாலே கொன்றுவிடுவார்கள் என்ற பயம் இருந்திருந்தால், அந்த சிந்தனை அங்கேயே செத்து இருக்கும். புல்வாமா தாக்குதல் ஒரு படிப்பினை இல்லையா? பஹல்காம் சுற்றுலா தலத்தில் கூடுதல் பாதுகாப்பு இருந்து இருக்க வேண்டாமா? சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க முடியவில்லை. புல்வாமா தாக்குதலில் 42 ராணுவ வீரர்களை நம்மால் பாதுகாக்க முடியவில்லை."

இவ்வாறு சீமான் தெரிவித்தார். 

Read Entire Article