புதுச்சேரி: புதுச்சேரியில் கவர்னர் கைலாஷ்நாதனுடன் மோதலை தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின் பாஜ மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா நேற்று புதுச்சேரி வந்து முதல்வரை சமாதானப்படுத்தினார்.
இந்நிலையில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:6 மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க ரூ.90 கோடி கைமாறி உள்ளது. அந்த கோப்பு கவர்னரின் அலுவலகத்தில் உள்ளது. 100 பிராந்திக் கடைகள் திறப்பதற்கு முதல்வர் அனுப்பிய கோப்பும் கவர்னரிடம் இருக்கிறது. இதுபோன்ற லஞ்சம் வாங்குகின்ற கோப்புகளை கவர்னர் நிறுத்தி வைத்திருக்கின்றார்.
இதனால் தான் ராஜினாமா செய்யப்போகிறேன் என்ற நாடகத்தை ரங்கசாமி ஆடி மிரட்டும் வேலையை ஆரம்பித்தார். அது பிசுபிசுத்து போய்விட்டது.
ரஜினி படத்தில் வருவதுபோல் தேஜ கூட்டணியில் முதல்வர் ரங்கசாமி தான் மாப்பிள்ளை. ஆனால் அவர் போட்டிருப்பது பாஜக சட்டை. டம்மி முதல்வர் என ரங்கசாமி மீண்டும் நிரூபித்துள்ளார். எந்த காலத்திலும் ரங்கசாமி ராஜினாமா செய்ய மாட்டார். அப்படி செய்தால் மறுநிமிடம் ரங்கசாமி ஜெயிலில்தான் இருப்பார். பாஜகவே அவரை சிறையில் தள்ளும் ஏனென்றால் அவர் மீது 7 ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. 2026 தேர்தலில் ஒரு இடத்தில்கூட என்ஆர் காங்கிரஸ், பாஜக வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post பாஜவை பகைத்துக் கொண்டால் ரங்கசாமி ஜெயிலில் தான் இருப்பார்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி appeared first on Dinakaran.