பாஜவுடன் கூட்டணி ஏற்பட்ட பிறகு முதல் முறையாக சென்னையில் நாளை மறுநாள் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: மூத்த நிர்வாகிகளை சமாளிக்க திட்டமா?

4 hours ago 2


சென்னை: பாஜவுடன் கூட்டணி ஏற்பட்ட பிறகு முதன்முறையாக, அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுதினம் சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், அதிமுக – பாஜ கூட்டணியை எதிர்க்கும் மூத்த நிர்வாகிகளை சமாளிக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை அதிமுக, பாஜ தனித்தனியே சந்தித்து பெரும் தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜ தலைமையிலான கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ஒருபோதும் பாஜவுடன் கூட்டணியே கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னணி தலைவர்கள் கூறிவந்த நிலையில் பாஜவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.

இந்த கூட்டணியை ஒரு சில தலைவர்கள் ஆதரித்தாலும், பெரும்பாலான தலைவர்கள், நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் மே 2ம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டது. அதிமுக செயற்குழு கூட்டத்தில் பாஜ கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக அதிமுக எம்எல்ஏக்களுக்கு இன்று (23ம் தேதி) சென்னையில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்து அளிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. பாஜவுடனான கூட்டணிக்கான எதிர்ப்பை சமாளிக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து தருகிறார் என கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (25ம் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் வரும் 25ம் தேதி (நாளை மறுதினம்) மாலை 4.30 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜவுடனான கூட்டணி குறித்தும் அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

அத்துடன் அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் பாஜ கூட்டணிக்கு எதிராக எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருக்கவே முன்னதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்து என அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், அதிமுக – பாஜ கூட்டணி ஏற்பட்ட பிறகு நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பதால் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பாஜவுடன் கூட்டணி ஏற்பட்ட பிறகு முதல் முறையாக சென்னையில் நாளை மறுநாள் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: மூத்த நிர்வாகிகளை சமாளிக்க திட்டமா? appeared first on Dinakaran.

Read Entire Article