சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:வயநாடு இடைத்தேர்தலில் ராகுல் காந்தி பெற்றதை விடக் கூடுதலாக வாக்குகள் பெற்று மகத்தான வெற்றியை பிரியங்கா காந்தி ஈட்டியுள்ளார். நாடாளுமன்ற மக்களவைக்கு அவர் வரப்போவது இந்தியா கூட்டணிக்கு மேலும் வலிமையைத் தரும். ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் மீது பொய் வழக்குகளைப் போட்டு ஒன்றிய பாஜ அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. மக்கள் ஆதரவோடு ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தலித் வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. பாஜவே எதிர்பாராத ஒரு வெற்றியை பெற்றுள்ளது. “இந்த வெற்றி மோடி -அமித்ஷா-அதானி கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி” என உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ராவத் கூறியிருப்பது மறுக்க முடியாத உண்மை. மேலும், இம்முடிவு பாஜகவுக்கு எதிரான வாக்குகளைச் சிதறவிடாமல், குறிப்பாக, தலித் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பாஜவுக்கு எதிரான வாக்குகளை சிதறவிடாமல் ஒருங்கிணைக்க வேண்டியதன் தேவையை மகாராஷ்டிரா தேர்தல் முடிவு உணர்த்துகிறது: திருமாவளவன் கருத்து appeared first on Dinakaran.