பாஜவுக்கு ஆதரவு தரவில்லை என்றால் ஓபிஎஸ், டிடிவிக்கு சிறை: திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி

3 months ago 19

மதுரை: பாஜவுக்கு ஆதரவு தரவில்லை என்றால் ஓபிஎஸ், டிடிவி சிறை செல்வது உறுதி என்று மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் மாஜி அமைச்சர் உதயகுமார் தலைமையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மாஜி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ துவக்கி வைத்தனர். மாலையில் உண்ணாவிரதத்தை மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் முடித்து வைத்தனர்.

இதில், திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரனால் அதிமுகவை அசைக்க முடியவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு நான் தான் என பேசிய ஓபிஎஸ், அவரது சக்தியை அவரே நிரூபித்து விட்டார். ராமநாதபுரத்தில் அதிமுகவை எதிர்த்து நின்று தோற்றுப்போனார். ஜெயலலிதாவை காப்பாற்றியது நாங்கள் தான் என பேசிய டிடிவி.தினகரனும் தேர்தலில் நின்று தோற்றார். இவர்கள் தோல்வியடைந்து செல்லாக்காசுகளாகி விட்டார்கள். டிடிவி.தினகரன், 2026 தேர்தலில் அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி முடிவுரை எழுதுவார் என்று கூறியுள்ளார். இதைச் சொல்ல அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்த குடும்பமான டிடிவி.தினகரன், நான் தான் சொந்தம் என்று ஜெயலலிதா பெயரில் கட்சி ஆரம்பிக்கிறார். ஓபிஎஸ் அதிமுகவை எதிர்த்து நின்று பெரிய சூழ்ச்சி செய்தார். தற்போது சேர்க்க வேண்டும் என்கிறார். அவருக்கு வெட்கம், மானம், சூடு சொரணை இல்லையா? இவர்கள் புலி, சிங்கம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். அனைவரும் பூஜ்ஜியம் தான். இன்றைக்கு லண்டன் வழக்கில் இருந்து தப்பிக்க ஒன்றிய அரசுடன் டிடிவி.தினகரன் இணக்கமாக உள்ளார். மூன்று முறை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அவர் மீது சொத்து வழக்கு உள்ளது. அதிலிருந்து தப்பிக்க பாஜகவிற்கு பின்னால் உள்ளார். ஒன்றிய பாஜவிற்கு ஆதரவாக இருந்தால் தான் கேட்டது கிடைக்கும். எதிராக இருந்தால் அவர்கள் சிறைக்குத்தான் அனுப்புவார்கள். இவ்வாறு பேசினார்.

The post பாஜவுக்கு ஆதரவு தரவில்லை என்றால் ஓபிஎஸ், டிடிவிக்கு சிறை: திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article