சென்னை: பாஜகவுடன் இணைந்து நீங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றி பெற போவதில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், தொகுதி மறுசீரமைப்பின் பெயரால் தமிழ்நாடிற்கு ஏற்படப்போகும் பேராபத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் நடத்திய அனைத்துக் கட்சிகூட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. கட்சி வேறுபாடுகளைத் தாண்டி தமிழ்நாட்டின் ஒற்றுமைக்குரலை வெளிப்படுத்த வேண்டும் எனும் முனைப்போடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். தமிழர்களுக்கு எதிரியான பாஜகவும் அதன் எடுபிடிகள் சிலரையும் தவிர அனைவரும் பங்கெடுத்து முதலமைச்சரின் முன்னெடுப்பிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.
அதிமுகவும் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு கொடுத்தது, ஆனால் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் திமுக நாடகம் நடத்துகிறது என மாற்றிப் பேசுகிறார்.தனது கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் இணைந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்து அடிமை ஆட்சி நடத்திய அதிமுக இதனை சொல்வதற்கு எதாவது தகுதியிருக்கிறதா?. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கெடுக்காமல் போனால் தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு விடுவோமோ எனும் அச்சத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக நாடகம் நடத்தியிருக்கின்றது, என்பதையே ஜெயக்குமாரின் பேச்சு காட்டுகிறது. பாஜகவுடன் இணைந்து நீங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றி பெற போவதில்லை, உங்களைப் போன்ற அடிமைகளை மக்கள் நம்ப போவதுமில்லை. முதலமைச்சரின் தலைமையில் தமிழ்நாடு போராடும், தனது உரிமையை வெல்லும்! இவ்வாறு தெரிவித்தார்.
The post பாஜகவுடன் இணைந்து நீங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றி பெற போவதில்லை: ஜெயக்குமாருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி appeared first on Dinakaran.