சென்னை: “பல மாநிலங்களில் மேற்கொண்ட அமலாக்கத் துறையின் மிரட்டல் உத்தியைத் தமிழகத்தையும் திமுகவையும் மிரட்டிப்பார்க்கலாம் என நினைத்து, தமிழகத்தின் டாஸ்மாக் நிறுவனத்தில் முகாந்திரமற்ற வகையில் சோதனை மேற்கொண்டது. தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டத் தொகுதி சீரமைப்பின் பெயரால் பாஜக போட்டிருந்த பாசிசத் திட்டத்தை முளையிலேயே முதல்வர் அம்பலப்படுத்திவிட்டார் என்ற ஆத்திரத்திரத்தில் ஆற்றாமையிலும் அமலாக்கத் துறையை மத்திய அரசு ஏவிவிட்டுள்ளது” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமலாக்கத் துறையின் மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் தமிழகம் அஞ்சாது என்பதை அறியாத ஆதிக்கவாதிகளின் அராஜக நடவடிக்கைக்கு எதிராகத் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் அமலாக்கத் துறைக்குக் குட்டு வைத்திருக்கிறது உயர் நீதிமன்றம். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிலேயே உச்ச நீதிமன்றத்தால் கடும் கண்டனத்தை எதிர்கொண்ட அமலாக்கத் துறை தற்போது மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறது.