*சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
அம்பை : கல்லிடைக்குறிச்சி அருகே உணவு தேடி கோயிலுக்குள் புகுந்த கரடி, அங்குள்ள பூஜை பொருட்களை சேதப்படுத்தியது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால் பீதியில் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களுக்கு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மான், மிளா, கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகளும் அதிகமாக உள்ளன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது மலைக்கிராம பகுதிகளுக்குள் புகுந்து அச்சுறுத்துவதும், விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.
கடந்த 8 மாதத்திற்கு முன் பாபநாசம் அருகே உள்ள கோட்டைவிளைப்பட்டி கிராமத்திற்குள் ஒரு ஜோடி கரடிகள் புகுந்து அட்டகாசம் செய்தது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. கடந்த 7ம் தேதி அயன்சிங்கம்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் கரடி ஊருக்குள் புகுந்தது. தெருநாய்கள் கரடியை குரைத்து பின்தொடர்ந்த கண்காணிப்பு கேமரா வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய கல்லிடைக்குறிச்சி அருகே நெசவாளர் காலனி, கோல்டன்நகர், பொன்மா நகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கரடி நடமாட்டம் இருப்பதாக அந்த பகுதி மக்களிடையே தகவல் பரவியது.
இதனால் அந்த பகுதி மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் நெசவாளர் காலனி அருகே வயல்வெளியில் அமைந்துள்ள அக்னி சாஸ்தா கோயிலுக்குள் புகுந்த கரடி கோயில் படி வழியாக ஏறி உணவு தேடி அலைந்தது. அங்கு ஏதும் இல்லாததால் கோயில் வளாகத்தில் இருந்த பூஜை பொருட்கள், பாத்திரங்களை சேதப்படுத்தியது. இந்த காட்சிகள் கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது.
இந்த கண்காணிப்பு பதிவு நேற்று சமூக வலைதளங்களில் பரவியதால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் கூண்டு அமைத்து கரடியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைபகுதியையொட்டிய கிராமப்பகுதியில் கரடி நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
விரைவில் பிடிபடும்
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை வனக் கோட்ட துணை இயக்குனர் இளையராஜா அறிவுரையின்படி வனச்சரகர் நித்யா தலைமையில் வனத்துறையினர், அந்த பகுதியில் கரடி வரும் பாதையில் கூண்டு வைத்து பலாப்பழம், அன்னாச்சி உள்ளிட்ட பழங்களை கூண்டுக்குள் வைத்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘விரைவில் கரடி பிடிபடும். அது அடிக்கடி வந்து செல்லும் பாதையில் கூண்டு வைக்கப்பட்டு இருப்பதால் இரவு அல்லது காலையில் கரடி பிடிபட்டு விடும் என நம்புகிறோம்.’ என்றனர்.
The post உணவு இல்லாததால் பூஜை பொருட்களை சேதப்படுத்தியது கல்லிடைக்குறிச்சி அருகே கோயிலில் புகுந்த கரடி appeared first on Dinakaran.