பாஜக தேசிய தலைவர் தேர்வு, பீகார் தேர்தல் ஒன்றிய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?.. அமித் ஷா, ஜே.பி.நட்டா சந்திப்பால் பரபரப்பு

4 hours ago 2

டெல்லி: பாஜக தேசிய தலைவர் தேர்வு, பீகார் தேர்தல் போன்ற காரணங்களால் விரைவில் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாகவும், முன்னதாக நேற்று அமித் ஷா, ஜே.பி.நட்டா திடீர் சந்திப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரதமர் மோடி, 72 பேர் கொண்ட ஒன்றிய அமைச்சரவையுடன் பதவியேற்றார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து ஓராண்டு காலம் முடிந்துள்ள நிலையில், இதுவரையில் ஒன்றிய அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யவில்லை. ஆனால் தற்போது பாஜக மேலிடம் அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறது. சமீபத்தில், 4 ராஜ்யசபா உறுப்பினர்கள் நியமனம், அரியானா மற்றும் கோவாவுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம், லடாக்கிற்கு புதிய துணைநிலை ஆளுநர் நியமனம் போன்றவை அடுத்தடுத்து நடந்துள்ளன.

இந்த தொடர் நியமனங்கள், அடுத்த கட்டமாக ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் வரப்போகிறது என்பதற்கான சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது. இந்த நியமனங்களைத் தொடர்ந்து, ஒன்றிய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட்டு, சிலர் மாற்றம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. வரும் 21ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக நடக்குமா? அல்லது கூட்டத் தொடர் முடிந்த பிறகா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் இடையே நேற்று டெல்லியில் முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அப்போது ஒன்றிய அமைச்சரவையில் மாற்றத்திற்கான முக்கிய காரணங்களாக, ஒன்றிய அமைச்சர்களின் செயல்பாடு, வரவிருக்கும் பீகார் மாநில சட்டப் பேரவை தேர்தல், பாஜக தேசிய தலைவர் தேர்ல் ஆகியவற்றை கருத்தில் முக்கிய ஆலோசனைகள் நடந்துள்ளது.

மேலும் அடுத்தாண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்த மாநிலங்களுக்கு ஒன்றிய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிப்பது, புதிய முகங்களுக்கு வாய்ப்பளித்து அமைச்சரவையில் மாற்றங்களை கொண்டுவருதல் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஒன்றிய அமைச்சரவை விதிகளின்படி, இன்னும் 9 புதிய அமைச்சர்களை நியமிக்க வாய்ப்புள்ளதால், விரைவில் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

The post பாஜக தேசிய தலைவர் தேர்வு, பீகார் தேர்தல் ஒன்றிய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?.. அமித் ஷா, ஜே.பி.நட்டா சந்திப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article