சென்னை: அமித்ஷாவை போல, அன்புமணியும் கூட்டணியில் அமைச்சரவை பதவி வேண்டும் என்று கேட்டதால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிச்சாமி, பந்தியில உட்காரவே வைக்கல, அதுக்குள்ள இலை ஓட்டைன்னு சொன்னா எப்படிங்க என்று பாமக கூட்டணியிலேயே இல்லை என்பதை விரக்தியோடு பேட்டி அளித்தார். அதேநேரத்தில் கூட்டணியை முடிவு செய்வது யார் என்பதில் பாமகவில் தந்தை, மகனுக்குள் போட்டி நிலவுகிறது.
அதிமுக கூட்டணியில் தற்போது பாஜ மற்றும் அவர்களது ஆதரவு பெற்ற சில சிறிய கட்சிகள் மட்டுமே உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், ஆட்சியில் பாஜ பங்கு பெறும் என்று அமித்ஷா அறிவித்தார். ஆனால் ஆட்சியில் பங்கு இல்லை. அதிமுக தனிப்பெருமான்மை பெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அவர் கூறிய பிறகும் 4 முறை கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா அறிவித்து வருகிறார்.
அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் தற்போது கூட்டணியில் இல்லை. தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று அறிவித்து விட்டனர். அதில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தராததால் அக்கட்சி கடும் அதிருப்தி அடைந்துள்ளது. பேச்சுவார்த்தையின்போது சொன்னபடி ராஜ்யசபா சீட் வேண்டும் என்று பிரேமலதா கூறி வருகிறார். ஆனால் அப்படி பேசவே இல்லை என்று எடப்பாடி மறுத்து விட்டார். இதனால் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. தற்போது கூட்டணி இல்லை. தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று பிரேமலதா அறிவித்து விட்டார்.
இந்தநிலையில் பாமகவும் கூட்டணியில் இல்லை. தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று ராமதாஸ் கூறினார். அதேநேரத்தில் அன்புமணி, பாஜவுடன் கூட்டணி அமைப்பதில் உறுதியாக உள்ளார். இந்தநிலையில்தான் தந்தை, மகனுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் கட்சியை உடைக்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் கட்சி யார் பக்கம் செல்லும். இருவரும் கட்சியை உடைப்பார்களா அல்லது ஒன்று சேர்வார்களா? இருவரும் போட்டி போட்டால் கட்சி முடக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இரு தரப்பினரும் விட்டுக் கொடுக்காமல் செயல்பட்டு வருகின்றனர்.
அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் வேண்டுகோள் விடுத்தார். தற்போது கூட்டணி குறித்த முடிவை எடுக்கும் அதிகாரம், அன்புமணிக்கா, ராமதாசுக்கா என்ற சந்தேகம் கட்சியின் மூத்த தலைவர்களுக்கே எழுந்துள்ளது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்குப் பிறகு, நேற்று பாமகவின் 37வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு கட்டமாக அன்புமணி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், பெரும் மக்கள் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி இந்த மண்ணில் உதித்த நாள் இன்று. சமூகநீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான இன்னொரு இயக்கம் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து காக்கும் இயக்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சி.
தமிழ் மொழி, இனம், தமிழ்நாட்டு மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையுடன் பயணிக்க வேண்டும். தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும். அது நமது உரிமையும் கூட. அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நமது இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம் என கூறியுள்ளார்.
இவ்வாறு கூட்டணியில் பங்கு வேண்டும் என்று அமித்ஷாவின் குரலாக அன்புமணி அறிவித்துள்ளார். ஆனால் கூட்டணி குறித்த முடிவை இந்த முறை நான் மட்டுமே எடுப்பேன் என்று ராமதாஸ் கூறியுள்ளதோடு, கூட்டணி குறித்து இப்போது அறிவிக்க மாட்டேன். தேர்தல் நேரத்தில்தான் அறிவிப்பேன் என்று மற்ற கூட்டணிகளுக்கும் கதவை திறந்து வைத்துள்ளார். அதற்கு காரணம், கூட்டணியில் சீட்டின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவே என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடியின் அழைப்பை ராமதாஸ் ஏற்றுக் கொள்ளாதநிலையில் அன்புமணி ஆட்சியில் பங்கு என்று கோஷம் எழுப்பியுள்ளது, அதிமுக கூட்டணியை ஒரு இறுதி வடிவம் கொடுக்க முடியாதநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அன்புமணியின் அறிவிப்பைத் தொடர்ந்து, சிதம்பரத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ‘அன்புமணி கூட்டணி ஆட்சியில் பங்கேற்போம் என கூறியுள்ளார். பாமக உங்கள் கூட்டணிக்கு வரும் என கூறியிருந்தீர்களே?’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி, ‘பாமக கூட்டணிக்கு வந்தாலும் வரலாம் என்றுதான் நேற்று கூறினேன். கூட்டணியில் இல்லை. பாமக வந்தால் பார்த்துக் கொள்ளலாம். ஏங்க, இன்னும் பந்தியிலேயே உட்கார வைக்கல… இலை ஓட்டைன்னு சொன்னா என்னங்க பண்றது. பாமகவில் இருப்பது உட்கட்சி பிரச்னை. அவர்களது பிரச்னையில் நாங்கள் தலையிடவில்லை’ என்றார்.
கூட்டணி அமைச்சரவை என்று அமித்ஷாவும், அன்புமணியும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், எடப்பாடி பழனிசாமி, கடும் ஆத்திரமடைந்துள்ளார். இதனால் கேள்வியை முடிப்பதற்கு முன்னதாகவே கோபத்தில் பதில் அளிக்கத் தொடங்கிவிடுகிறார். இவ்வாறு கூட்டணியில் தலைவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல் பெரும் பரபரப்பை ெதாடர்ந்து உருவாக்கி வருகிறது.
The post அமித்ஷாவை தொடர்ந்து அன்புமணியும் ஆட்சியில் பங்கு கேட்டதால் அதிர்ச்சி கூட்டணியில் பாமகவுக்கு இடமில்லை: எடப்பாடி விரக்தி பேட்டி appeared first on Dinakaran.