மீனம்பாக்கம்: தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று சென்னை வந்த விமானத்தில் ஆண் பயணி கடத்திவந்த ரூ.7 கோடி மதிப்பிலான 6.9 கிலோ உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சாவை சுங்கத்துறையின் மோப்பநாய் கண்டறிந்தது. இதைத் தொடர்ந்து, சென்னையை சேர்ந்த கடத்தல் ஆண் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, அவரிடம் இருந்த உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்துக்கு ஒரு தனியார் ஏர்லைன்ஸ் விமானம் வந்திறங்கியது. இதில் வந்த பயணிகளை கண்காணித்து, அவர்களின் உடைமைகளை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். இதில், கடந்த 2 நாட்களுக்கு முன் பாங்காக்குக்கு சுற்றுலா பயணியாக சென்று திரும்பிய சென்னையை சேர்ந்த ஆண் பயணிமீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரை நிறுத்தி விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதில் சந்தேகமான சுங்கத்துறை அதிகாரிகள், போதைபொருள் கண்டறியும் மோப்ப நாய் உதவியுடன் அவரது உடைமைகளை பரிசோதித்தனர். அவரது உடைமைகளை மோப்பநாய் நுகர்ந்து, தரையில் அமர்ந்து, கால்நகங்களால் தரையை கீறி சைகை காட்டியது. இதன்மூலம், அவரது உடைமையில் தடை செய்யப்பட்ட பொருள் ஏதோ இருக்கிறது என்று அதிகாரிகளுக்கு விளங்கியது.
இதைத் தொடர்ந்து, சென்னையை சேர்ந்த ஆண் பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் திறந்து பரிசோதித்தனர். அதில் இருந்த 3 பார்சல்களை பிரித்து பார்த்தபோது, அந்த சென்னை பயணி ரூ.7 கோடி மதிப்பிலான 6.9 கிலோ எடையிலான உயர் ரக உலர் கஞ்சாவை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, உயர் ரக கஞ்சா கடத்தி வந்த சென்னையை சேர்ந்த ஆண் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர். அவரிடம் இருந்து ரூ.7 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சுங்கத்துறை அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில், இவரை தாய்லாந்து நாட்டில் கஞ்சா கடத்திவர அனுப்பி வைத்த ஆசாமி, சென்னை விமானநிலையத்துக்கு வந்திருப்பதாகவும், அவரிடம் கஞ்சாவை கொடுத்து, அதற்கான அன்பளிப்பு பணத்தை பெற்று செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரியவந்தது. எனினும், விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் கடத்தல் ஆண் பயணி சிக்கிக்கொண்டார் என்ற தகவல் அறிந்ததும், கஞ்சாவை பெற்று செல்ல விமானநிலையம் வந்திருந்த ஆசாமி தப்பியோடி தலைமறைவாகி விட்டார். பிடிபட்ட சென்னை பயணி அளித்த தகவலின்பேரில், உயர் ரக கஞ்சா கடத்தல் கும்பலை சேர்ந்த ஆசாமி குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
The post பாங்காக்கில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவந்த ரூ.7 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்: ஆண் பயணி கைது appeared first on Dinakaran.