பாக். எல்லை மாநிலங்களான காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, குஜராத் எல்லை பகுதிகளில் 26 இடங்களை குறிவைத்து பாக்.படைகள் தாக்குதல் நடத்தின. பாக். அனுப்பும் ஏவுகணைகள், டிரோன்களை வான்வெளியிலேயே இந்தியா சுட்டு வீழ்த்தி வருகிறது. நேற்று அதிகாலையும் பாக். படைகள் தாக்குதல் நடத்தியதை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இதன் எஞ்சிய பாகங்கள் எல்லை கிராமங்களில் கிடப்பது பீதியை ஏற்படுத்தி உள்ளது.
* பஞ்சாப்
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் அடையாளம் தெரியாத ஏவுகணைகளின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சிக்ரி மற்றும் சாந்த்ரா கிராமங்களில் இவை கண்டுபிடிக்கப்பட்டதாக ஹோஷியார்பூர் காவல் கண்காணிப்பாளர் (விசாரணை) முகேஷ் குமார் தெரிவித்தார். இதுகுறித்து இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பதன்கோட் மற்றும் ஜலந்தர் மாவட்டங்களில் இடைவிடாத தாக்குதலை பாக். நடத்தியதால் ஹோஷியார்பூர், அமிர்தசரஸ், பெரோஸ்பூர், பாசில்கா மாவட்டங்களில் விமான சைரன்கள் ஒலித்தன. ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள கங்கானிவால் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏவுகணை ஒன்று விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பொதுமக்களுக்கு காயம் ஏற்பட்டது. வீடுகள் சேதம் அடைந்தன.
பதன்கோட்டில் அதிகாலை 5 மணிக்கும், ஜலந்தரில் காலை 8:30 மணிக்கும் குண்டுவெடிப்பு போன்ற சத்தங்கள் கேட்டன. அமிர்தசரஸ், ஜலந்தர் மற்றும் டர்ன் தரன் மாவட்டங்களில் உள்ள பியாஸில் சில இடங்களில் அடையாளம் தகர்க்கப்பட்ட டிரோன் பாகங்கள் மீட்கப்பட்டன. பக்வாரா பகுதியில் உள்ள கல்யான் மற்றும் சாஹ்னி கிராமங்களுக்கு இடையே உள்ள ஒரு வயலில் சுமார் 7-8 அடி ஆழமும் 12-14 அடி அகலமும் கொண்ட பள்ளம் ஏற்பட்டது. அதில் ஏவுகணை பாகங்கள் மீட்கப்பட்டன. பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் இருந்து பல டிரோன்கள் நேற்று அதிகாலை 5 மணி அளவில் மக்கள் குடியிருப்பை நோக்கி ஏவப்பட்டன. இதை இந்தியா சுட்டு வீழ்த்தியது. குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ராஜுபேலா சிச்ரான் கிராமத்தில் ஒரு விவசாய வயலில் டிரோன் தாக்கியதில் ஒரு பெரிய பள்ளம் உருவானது, சுமார் 35 அடி அகலமும் 15 அடி ஆழமும் கொண்ட ஒரு பள்ளம் உருவானதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
* காஷ்மீர்
காஷ்மீரில் ஸ்ரீநகரை உலுக்கிய சத்தத்துடன் பயங்கர ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. தால் ஏரியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஏரியில் மேற்பரப்பில் தீப்பிடித்து புகை வெளியேறியது. அங்கு விழுந்த ஏவுகணை பாகங்களை பாதுகாப்பு படையினர் மீட்டு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள லாஸ்ஜனில் இருந்து மற்றொரு ஏவுகணை பாகங்கள் மீட்கப்பட்டது. இது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று காலை ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து வந்த 2 டிரோன்களையும் இந்தியா சுட்டு வீழ்த்தியது.
* அரியானா
அரியானாவின் சிர்சாவிலும் தகர்க்கப்பட்ட டிரோன், ஏவுகணை பாகங்கள் மீட்கப்பட்டன.
* குஜராத்
பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள குஜராத் மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களிலும் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து எல்லை மாவட்டங்கள் கிராமங்களை வெளியேற்றும் திட்டங்களைத் தயாராக வைத்திருக்குமாறு முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டார். கட்ச், பனஸ்கந்தா, பதான், ஜாம்நகர் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரஸ் மூலம் அவர் ஆய்வு செய்தார்.
* ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் பகுதியை சுற்றி நேற்று டிரோன் தாக்குதலை பாக். படைகள் நடத்தின. இதை எல்லாம் இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இதில் சிதைந்த டிரோன் பாகங்களை வீரர்கள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.
* பாகிஸ்தானுக்கு ரூ.8,542 கோடி கடனுதவி: இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சர்வதேச நாணய நிதியம் அனுமதி
இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு ரூ.8542கோடி கடனுதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்துள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு வாஷிங்டனில் நேற்று முன்தினம் நடந்தது. எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு தொடர்ந்து நிதியுதவி அளிப்பதற்கு வெகுமதி அளிப்பது உலக சமூகத்திற்கு ஆபத்தான செய்தியை அனுப்புவதாக கூறி இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் அரசு ஆதரவுடன் எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு நிதியளிப்பத்றகாக இது தவறாக பயன்படுத்தப்படலாம் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தில் தனது எதிர்ப்பை பதிவு செய்த இந்தியா வாக்களிப்பதில் இருந்து விலகியது. இருப்பினும் கடனுதவி வழங்க ஐஎம்எப் அனுமதி வழங்கியுள்ளது.
The post பாக். முயற்சியை முறியடித்த இந்தியா 5 மாநில எல்லையில் மீட்கப்பட்ட ஏவுகணை, டிரோன் பாகங்கள் appeared first on Dinakaran.