
லாகூர்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், தனது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியடைந்த நிலையில், கடைசி ஆட்டம் மழையால் ரத்தானது. இதனால் வெறும் ஒரு புள்ளியுடன் தனது பிரிவில் கடைசி இடம் பிடித்தது.
இதனால் அந்த அணியை அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். சரியாக விளையாட வீரர்களை நீக்க வேண்டும் என்றும் கேப்டன், பயிற்சியாளர்கள் அனைவரையும் மாற்ற வேண்டும் என்றும் தொடர்ச்சியாக விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம், தற்போதுள்ள பாகிஸ்தான் அணியில் ஆறு, ஏழு வீரர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக துடிப்பான இளமையான இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வரவேண்டும் என்றும் தற்போது இருந்தே 2026 டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு அந்த மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு கருத்துகளை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் அந்த கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூறுகையில், "வாசிம் அக்ரம் சொன்னதை நான் கேட்டேன். அன்று நம் அணி அடைந்த தோல்வியால் நாம் அனைவருமே வருத்தத்தில் இருந்தோம். அதே வேளையில் அவர் 6 முதல் 7 வீரர்களை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறுகிறார். அவரிடம் நான் கேட்க வேண்டிய கேள்வி ஒன்றுதான். அந்த ஆறு, ஏழு வீரர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக எந்த வீரர்களை அணியில் சேர்ப்பீர்கள்? நமது உள்ளூர் கிரிக்கெட்டில் அதுபோன்ற வீரர்களே கிடையாது. அதேபோன்று நாம் அதுபோன்ற வீரர்களை பயிற்றுவித்து வளர்த்தெடுக்கவும் இல்லை. அதுபோன்ற ஒரு சரியான பயிற்சி மையமே நம்மிடம் கிடையாது " என்று கூறினார்.