சத்குரு நிகழ்ச்சியில் டி.கே. சிவக்குமார்... காங்கிரசுக்குள் வலுக்கும் எதிர்ப்பு

3 hours ago 2

பெங்களூரு,

கோவையில் ஈஷா யோகா மையத்தில் கடந்த புதன்கிழமை நடந்த மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் கர்நாடக தலைவர் மற்றும் மாநில துணை முதல்-மந்திரியான டி.கே. சிவக்குமாரும் கலந்து கொண்டார்.

சத்குரு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சிவக்குமார் கலந்து கொண்டது காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சையாகி உள்ளது. கர்நாடக கூட்டுறவு துறை மந்திரி ராஜண்ணா கூறும்போது, மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை யாரென்றே தனக்கு தெரியாது என கூறியவர் சத்குரு. அதுபோன்ற நபர்களுடன் டி.கே. சிவக்குமார் மேடையை ஒன்றாக பகிர்ந்து கொண்டது எப்படி நியாயம்? இதற்கு அவர் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

பொதுப்பணி துறை மந்திரி சதீஷ் ஜார்கிகோளி கூறும்போது, இந்த விவகாரம் பற்றி கட்சியின் டெல்லி தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

எனினும், டி.கே. சிவக்குமாரின் சகோதரரான முன்னாள் எம்.பி. டி.கே. சுரேஷ் கூறும்போது, கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றி கட்சி தலைமைக்கு தகவல் தெரிவித்து விட்டே அவர் சென்றார். பிரதமர் மோடியை சந்திக்கும்போது கூட சிவக்குமார் அதுபற்றி முன்பே கூறி விட்டே சென்றார்.

இதில் ரகசியம் என்று எதுவும் கிடையாது என கூறினார். சத்குரு தனிப்பட்ட முறையில் அழைத்ததன் பேரிலேயே, அதனை ஏற்று கொண்டு கோவையில் நடந்த அந்நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார் என்றும் கூறினார்.

இந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்து துணை முதல்-மந்திரி சிவக்குமார் கூறும்போது, நான் இந்துவாக பிறந்தேன். இந்துவாகவே மரணம் அடைவேன் என மதத்தின் மீது கொண்ட தன்னுடைய ஆழ்ந்த நம்பிக்கையை வலியுறுத்தி கூறினார்.

Read Entire Article