
புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலால், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு தனது வான்பகுதியை பாகிஸ்தான் கடந்த வாரம் மூடியது.
இதனால் இந்தியாவில் இருந்து சர்வதேச நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் குறிப்பாக வட இந்திய நகரங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் பல கி.மீ. தூரத்துக்கு கூடுதலாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த விமானங்களின் பயண நேரம் மற்றும் அவற்றின் இயக்க செலவுகள் ஆகியவை அதிகரித்து உள்ளன. இது விமான நிறுவனங்களுக்கு பெரும் செலவை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் விமான கட்டணம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து மத்திய சிவில் விமானப்போக்குவரத்து மந்திரி ராம்மோகன் நாயுடு கூறியதாவது:-
பாகிஸ்தான் வான்பகுதி மூடப்பட்டதை தொடர்ந்து எழுந்திருக்கும் சூழல் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். இது தொடர்பாக விமான நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து வருகிறோம். பாகிஸ்தான் வான்பகுதி நீண்ட காலம் மூடப்பட்டால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதை சமாளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியுமாறு விமான நிறுவனங்களை கேட்டுக்ெகாண்டு இருக்கிறோம்.
இந்த சூழல் தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு, ஒரு முழுமையான ஆய்வும், புரிதலும் நமக்கு தேவை. அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்தபிறகே, பயண கட்டணங்கள் தொடர்பாக விமான நிறுவனங்களுக்கு தற்காலிக முறையில் எத்தகைய அறிவுறுத்தலும் வழங்க முடியும்.
வான்பகுதி மூடல் காரணமாக ஏற்படப் போகும் அனைத்து விளைவுகள் குறித்தும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மேலும் பெரிய அளவில் கட்டண அதிகரிப்பு ஏற்படுமானால் நிச்சயமாக அமைச்சகம் அது குறித்தும் பரிசீலிக்கும். தற்போதைய சூழ்நிலையில் பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கிய முன்னுரிமை என்பதை அரசு உறுதி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.