
அங்காரா,
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. 3 ஆண்டுகளை கடந்தும் போர் என்பது தொடர்ந்து வருகிறது. இந்த போரில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என்று 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த போரை நிறுத்த பல நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அது பலனளிக்கவில்லை.
ரஷியா- உக்ரைன் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இன்று (மே 15) நேரடி பேச்சுவார்த்தை நடத்தலாம் என உக்ரைனுக்கு ரஷிய அதிபர் புடின் அழைப்பு விடுத்து இருந்தார்.இதையடுத்து, ''மே 15ம் தேதி வியாழக்கிழமை துருக்கியில் புதினுக்காக நான் காத்திருப்பேன். தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்துவோம்'' என புதின் அழைப்பை ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டார். போர் நிறுத்தம் ஒப்பந்தம் தொடர்பாக, துருக்கியில் உள்ள அங்காராவில் இன்று (மே 15) உக்ரைன்- ரஷியா நேரடி பேச்சுவார்த்தை நடத்துகிறது.தற்போது துருக்கியில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையை புதின் புறக்கணிக்க உள்ளதாகவும், அவர் தனது பிரதிநிதிகளை நேரடி பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக, ரஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இது குறித்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
துருக்கியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து அமெரிக்க ஜனாதிபடி டிரம்ப் பரிசீலித்து வருவதாக நான் கேள்விப்பட்டேன். ரஷியாவிலிருந்து யார் வருவார்கள் என்பதைப் பொருத்திருந்து பார்க்கிறேன், பின்னர் உக்ரைன் எந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வேன். போர் நிறுத்தம் கொண்டு வர ரஷியா மீது அழுத்தம் கொடுக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு தலைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். அமைதி மற்றும் ராஜதந்திரத்திற்கு உதவும் அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
துருக்கியின் தலைநகர் அங்காராவில் உக்ரைன், ரஷியா இடையே இன்று போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் போர் நிறுத்தம் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடம் எழுந்துள்ளது. ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்கிறார், இருநாட்டு முக்கிய அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.