எல்லையில் நடந்து வரும் தொடர் தாக்குதல் தொடர்பாக நேற்று காலை பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய மூன்று பேரும் பேட்டியளித்தனர்.
அதன் விவரம்:
* இந்திய ராணுவ நிலைகளை தாக்கியதாக பாக். சொல்வது பொய்
இதில் முதலாவதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், ‘பாகிஸ்தானின் செயல்பாடுகளால் தான் இந்த ராணுவ நடவடிக்கை என்பது எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் ராணுவ முகாம்கள் விமான தளங்களை தாக்கியதாக பாகிஸ்தான் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இந்தியாவின் பல்வேறு கட்டமைப்புகளையும் மின்சார கட்டமைப்புகளையும் தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் கூறுவது உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.
சிர்சா விமான தளத்தை தாக்கியதாக பாகிஸ்தான் கூறியது பொய்யான தகவலாகும். இந்திய ராணுவத்தின் தளவாடங்களுக்கோ அல்லது ராணுவ முகாம்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை.
இந்தியாவுடைய ராணுவ முகாம்கள் விமான தளங்களை தாக்கியதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறி வருவது வேடிக்கையாக உள்ளது. ஜம்மு மற்றும் பஞ்சாபில் பொதுமக்களை நோக்கி பாகிஸ்தான் தான் தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும், இந்திய ஏவுகணைகள் ஆப்கானிஸ்தானின் குடியிருப்புகளை தாக்கியதாக பாகிஸ்தான் கூறுவது உண்மை கிடையாது. ஆப்கானிஸ்தான் மக்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டியதும் இல்லை, ஏனெனில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது யார் என்பதை ஆப்கானிஸ்தான் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தனர்.
* பள்ளிகள், மருத்துவமனைகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்
கர்னல் சோபியா குரேஷி கூறுகையில்,’பாகிஸ்தான் ராணுவம் மேற்கு எல்லைகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. அது இந்தியாவின் ராணுவ தளங்களைத் தாக்க டிரோன்கள், நீண்ட தூர ஆயுதங்கள், சுற்றித் திரியும் வெடிமருந்துகள் மற்றும் போர் விமானங்களைப் பயன்படுத்தி உள்ளது. இந்தியா பல ஆபத்துகளை தடுத்து நிறுத்தி தாக்கியது. ஆனால் பாகிஸ்தான் 26 க்கும் மேற்பட்ட இடங்களில் வான் வழியாக ஊடுருவ முயன்றது. மேலும் உதம்பூர், பூஜ், பதான்கோட், பதிண்டா ஆகிய இடங்களை குறிவைத்தது. அதிகாலை 1:40 மணிக்கு பஞ்சாபின் விமான தளத்தை குறிவைக்க அதிவேக ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. அவர்கள் சுகாதார வசதிகள் மற்றும் பள்ளிகளையும் கூட தாக்கினர். தொலைதூரமாக சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள் கனரக துப்பாக்கிகள் உள்ளவற்றை கொண்டு பாகிஸ்தான் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்தியாவின் நடவடிக்கை என்பது திட்டமிட்ட குறுகிய அளவிலான எதிர்வினையாற்றும் வகையிலான நடவடிக்கையை மட்டுமே செய்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் பஞ்சாபில் உள்ள விமான தளத்தை குறிவைத்தே தாக்குதலை தொடங்கியது. அவர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக சரியான தாக்குதலை இந்தியா கொடுத்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் ஏவுகணைகளை” பயன்படுத்தியது. பாகிஸ்தான் தன்னிடமுள்ள அதிவேக ஏவுகணையை நேற்று அதிகாலை 1.40 மணியளவில் இந்தியாவை நோக்கி பயன்படுத்தியது. இதையடுத்து பாகிஸ்தானுடைய அந்த ஏவுகணை தாக்குதல் முறியடிக்கப்பட்டது’என்று தெரிவித்தார்.
* இந்திய எல்லையை நோக்கி பாக். படை முன்னேறுகிறது
விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில் கூறியதில்,‘‘விரைவான மற்றும் துல்லியமான பதிலடியாக இந்திய ஆயுதப்படைகள் அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தானின் ராணுவ இலக்குகளில் மட்டுமே தாக்குதலை நடத்தியது. இந்திய எஸ்-400 அமைப்பை அழித்ததாகவும், சூரத் மற்றும் சிர்சாவில் உள்ள விமான நிலையங்களை அழித்ததாகவும் கூறி, பாகிஸ்தான் தொடர்ந்து பொய்யான தகவல்களை தெரிவித்து, தீங்கிழைக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானால் பரப்பப்படும் இந்த தவறான கூற்றுக்களை இந்தியா சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறது.இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் அவர்களது படைகளை நகர்த்தி வருகிறது. இருப்பினும் இந்திய படைகள் பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருக்கிறது. பல்வேறு இடங்களில் டிரோன்களைக் கொண்டும் தாக்குதலை நேற்று இரவு நடத்தியது.
பாகிஸ்தான் இந்தியாவில் உள்ள பொதுமக்களின் குடியிருப்புகளை குறிவைத்து தாக்குதலை நடத்துகிறது. இந்தியாவில் உள்ள மருத்துவ நிலையங்கள், பள்ளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் செயல்பட்டது. பாகிஸ்தானுடைய அனைத்து தாக்குதல்களையும் முறியடித்துள்ளோம். பாகிஸ்தான் ஜம்முவில் உள்ள குடியிருப்புகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலில் சிலர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் பதில் தாக்குதலில் பாகிஸ்தானுடைய ராணுவ தளவாடங்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தானின் ரேடார் மற்றும் ஆயுதம் சேமிப்பு கிடங்குகளை இந்தியா தாக்கி கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தன்னுடைய துருப்புகளை அதிக அளவில் எல்லையை நோக்கி நகர்த்தி போர் சீண்டல்களை செய்து வருகிறது.இவ்வாறு தெரிவித்தார்.
* பாக்.கின் 8 ராணுவ தளங்களை தகர்த்தது இந்தியா
கர்னல் சோபியா குரேஷி கூறுகையில்,’பாகிஸ்தான் வேண்டுமென்றே விமானப்படை தளங்களை குறிவைத்த பிறகு, இந்திய ஆயுதப்படைகள் விரைவான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட பதிலடி நடவடிக்கையை எடுத்தது. இதன்படி பாகிஸ்தானில் உள்ள தொழில்நுட்ப நிறுவல்கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், ரேடார் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் குறிவைக்கப்பட்டன. ரபிக்கி, முரீத், சக்லாலா, ரஹீம் யார் கான், சுக்கூர், சுனியன், பஸ்ரூர், சியால்கோட் ஆகிய இடங்களில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளங்கள் வான்வழி ஏவுதல், துல்லிய வெடிமருந்துகள் மற்றும் போர் விமானங்கள் மூலம் குறிவைத்து தாக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் போது பாகிஸ்தானின் சேதம் மற்றும் இழப்புகளை இந்தியா உறுதி செய்துள்ளது’ என்றார்.
The post பாகிஸ்தான் மீது இந்தியா பதிலடி என்ன? ஒன்றிய அரசு விளக்கம் appeared first on Dinakaran.